டீக்கடை நடத்தும் மன்னர் வாரிசு: அரசர்கள், சாமானியர் ஆன கதை

🕔 August 23, 2016

King Bagathoor - 00
கதை ஒன்று

மேலேயுள்ள புகைப்படத்தில் இருப்பவர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் பகதூர் ஷா ஸாஃபர். மிகச் சிறந்த கவிஞர் இவர் . ஆயிரக்கணக்கில் கவிதைகளையும், கஜல் பாடல்களையும் எழுதி இருக்கிறார். முகலாய மன்னர்களிலேயே, புகைப்படம் எடுக்கப்பட்ட முதல் மற்றும் கடைசி மன்னர் என்ற பெருமை, இவருக்கு உண்டு. மன்னர் ஜஹாங்கீர், இவருடைய எள்ளுத் தாத்தா. அவர் 1613ஆம் ஆண்டில் கொடுத்த அனுமதியால்தான், ஆங்கிலேயர்களால் இந்தியாவில் தொழில் தொடங்க முடிந்தது. பகதூர் ஷாவின் இன்னொரு பாட்டனார், மன்னர் ஔரங்கசீப். இவரது அரசாங்கம் 1707ல் ஈட்டிய வரி வருமானம் 300 கோடி இந்திய ரூபாய் (இலங்கை மதிப்பில் 650 கோடி ரூபாய்). இன்றைய மதிப்பில் இது தோராயமாக 01 லட்சம் கோடி இந்திய ரூபாயாகும் (இலங்கை மதிப்பில் சுமார் 02 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய்).

ஔரங்கசீப் மறைந்து 100 ஆண்டுகளில் முகலாய மன்னர்களின் நிலைமை தலைகீழானது. ஆங்கிலேயர்கள் வழங்கிய மாத மானியத்தில் வாழ்க்கை நடத்தும் சூழலுக்கு, அவர்கள் தள்ளப்பட்டார்கள். மன்னர் பகதூர் ஷாவுக்கு ஆங்கிலேயர்கள் மாதாமாதம் வழங்கிய மானியம் 1,20,000 ரூபாய். அதை வைத்துக்கொண்டு அவர், தனது மனைவியருடனும் வாரிசுகளுடனும் அமைதியாக வாழ்ந்து வந்தார்.

இந்தியாவின் மீரட் நகரத்தில் இந்தியச் சிப்பாய்கள் 1857ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்தார்கள் என்று வரலாற்றுப் பாடத்தில் உள்ளது. அந்தச் சம்பவம் நடந்தபோது மன்னருக்கு 82 வயது. சிப்பாய்கள், புரட்சியைத் தொடங்கிய கையோடு டில்லி செங்கோட்டைக்குச் சென்று, மன்னர் பகதூர் ஷாவை சந்தித்துப் புரட்சிக்குத் தலைமை ஏற்குமாறு வேண்டினார்கள். மன்னரும் சம்மதித்தார். ஒரு சில தினங்களில் ஆங்கிலேய அரசு அவரைக் கைது செய்தது.

மன்னர் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தி, 1858ஆம் ஆண்டில், ரங்கூனுக்கு நாடு கடத்தியது. மன்னருடன் அவரது முக்கிய உறவினர்கள் 26 பேர் ரங்கூன் சென்றார்கள். அவர்களில் அரசியார் ஜீனத் மஹல், அவரது மகன்கள் மிர்ஸா ஜவான் பக்த், மிர்ஸா ஷா அப்பாஸ் ஆகியோர் அடக்கம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மன்னர் பகதூர் ஷா, தனது 87ஆவது வயதில் ரங்கூனில் உயிர் நீத்தார்.

கதை இரண்டு

மேலேயுள்ள படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் சுல்தானா பேகம். இவர் யார் தெரியுமா? படத்தில் இருக்கும் மன்னர் பகதூர் ஷா இருக்கிறாரே… அவரது மகன் மிர்ஸா ஜவான் பக்த்… அவரது மகன் ஜம்ஷித் பக்த்… அவரது மகன் முகமது பேதார் பக்த்… ‘படத்தில் இருப்பவர் யார் என்று சொல்லாமல் யார் யாரைப் பற்றி எல்லாமோ சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே’ என்று திட்டாதீர்கள்.

மன்னர் பகதூர்ஷாவின் கொள்ளுப்பேரனான, முகமது பேதார் பக்தின் மனைவிதான் இவர். சுருங்கச் சொன்னால், புகழ்மிக்க ஒரு சாம்ராஜ்யத்தின் வாரிசு.

தற்போது கொல்கத்தாவின் ஒரு சேரிப்பகுதியில் தனது மகன்கள் மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார். தனது கணவர் இறந்த பிறகு, சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி, அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்