ஒளித்து விளையாடுதல்

🕔 August 23, 2016

Article - MTM - 098
– முகம்மது தம்பி மரைக்கார் –

ரசியல் அரங்கில் காலத்துக்குக் காலம் உதைத்து விளையாட ஏதோவொரு பந்து கிடைத்து விடுகிறது. பந்தினுடைய பருமன் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை. விளையாடத் தெரியாதவர்கள் கூட, பந்துகளை வைத்து ‘ஆடி’க் கொண்டிருப்பதுதான் அரசியல் அரங்கின் ஆச்சரியமாகும். ‘வடக்கு – கிழக்கு விவகாரம்’ என்பது, அரசியல் அரங்கில் அடிக்கடி விழுகின்ற பந்தாகும். இப்போதும், ‘அந்த’ப் பந்து அரசியல் அரங்கில் வந்து விழுந்திருக்கிறது. உதைத்து விளையாடும் கால்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாட்டினை புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் தீர்த்து வைக்க முடியுமென்று அரசு நம்புகிறது. அரசியலமைப்பினூடாக, ஆட்சி – அதிகாரங்களை நேர்மையாகப் பங்கிடுவதன் மூலம், அமைதியான ஒரு தேசத்தினைக் கட்டியெழுப்ப முடியும் என்பது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

புதிய அரசியலமைப்பு பற்றிய பேச்சுக்கள் ஆரம்பித்தவுடன், இன முரண்பாட்டுக்கான அரசியல் தீர்வு பற்றிய கதையாடல்களும் உரத்த குரலில் எழத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு சமூகமும், சமூகங்களைப் பிரதிநிதிப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்ற சபைகளும் – இவை தொடர்பில் தமது கருத்துக்களைத் வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக இன முரண்பாட்டுக்கான அரசியல் தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்வதிலும், அது குறித்துப் பேசுவதிலும், கருத்துக்களை முன்வைப்பதிலும் தமிழர் சமூகம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக பூமியென்பதில் தமிழர் தரப்பு உறுதியாக உள்ளது. மேற்படி மாகாணங்கள் இரண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதிலும் அவர்கள் விடாப்பிடியாக இருக்கின்றனர். இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் தமக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும, தமிழ் சமூகம் கிட்டத்தட்ட ஒன்றுபட்டு நிற்கிறது.

ஆனால், மேற்படி விடயங்களில் முஸ்லிம்கள் மிகவும் பொடுபோக்கான மனநிலையில் உள்ளமையினை அவதானிக்க முடிகிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலோ, தீர்வுத் திட்டமொன்று குறித்தோ எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சியும் இதுவரை தமது யோசனைகளை உத்தியோகபூர்வமாக முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள முஸ்லிம் கட்சிகளில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதானமானது. வடக்கு – கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளையும், அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளையும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது. ஆயினும், புதிய அரசியலமைப்பு தொடர்பில் இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் எதுவித யோசனைகளையும் உத்தியோகபூர்வமாக முன்வைக்கவில்லை. மேலும், இன முரண்பாட்டுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தில், தமது கோரிக்கைகள் என்ன என்பது குறித்தும் மு.காங்கிரஸ் பேசவில்லை.

இதேவேளை, ஏனைய முஸ்லிம் கட்சிகளான றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சிகளும் மேற்படி விடயங்களில் ஆர்வமற்ற நிலையிலேயே உள்ளன.

இருந்தபோதும், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தனியாகவே இருக்க வேண்டும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுத்தீன் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா ஆகியோர் கூறி வருகின்றனர். அவ்வாறானதொரு நிலையிலேயே அரசியல் தீர்வு முன்வைக்கப்படுதல் வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் மேற்படி இருவரும் தமது எதிர்ப்பினை பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் இவ்விவகாரத்தில் ‘ஒளித்து விளையாடும்’ ஒரு போக்கினையே கடைப்பிடித்து வருகிறது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கு எதிரான மனநிலையுடன் முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்களில் கணிசமானோர் உள்ளனர். இன்னொருபுறம் அந்தக் கட்சிக்குள்ளிருக்கும் சிலர், வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர். ஆனாலும், இது விடயத்தில் மு.காங்கிரசின் தலைமை இதுவரை எதுவித தீர்க்கமான அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம். முபீன் அண்மையில் ஏறாவூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்த கருத்து, மேற்படி விடயத்துடன் இணைத்து நோக்கும்போது அவதானம் பெறுகிறது. அவருடைய உரையில் – முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான அதாஉல்லா பற்றிக் கூறும்போதுளூ ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரித்த இனவாதியான அதாஉல்லா’ என்று தெரிவித்திருந்தார். இணைந்திருந்த வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டமைக்கு அதாஉல்லாவும் ஒருவகையில் காரணமாவார் என்று கூறப்படுகிறது. அதனால்தான், மு.காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் அவ்வாறு கூறியிருந்தார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு அதாஉல்லா காரணமாக இருந்தமையினால், அவரை ஓர் இனவாதியாக முபீன் பார்க்கிறார். அப்படியென்றால், வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஆதரவளிப்பவர்கள்தான் இனவாதமற்றவர்கள் என்று முபீன் நம்புகின்றார். முஸ்லிம் காங்கிரசினுடைய கொள்கைகளைப் பரப்புவதற்கான உத்தியோகபூர்வ செயலாளர் என்கிற வகையில், பொதுவெளியில் முபீன் வெளியிட்ட இந்தக் கருத்தினை, மு.காங்கிரசின் அபிப்பிராயமாகவும் எடுத்துக் கொள்ள முடியும். அப்படிப் பார்த்தால், வடக்கு – கிழக்கு இணைப்பினை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் ஒரு மனநிலையுடன் உள்ளதாக நாம் கருத இடமுள்ளது.

இதேவேளை, வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கப் போவதாக, அண்மைக் காலமாக ஊடகங்களில் ஒரு கதை பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதனையும், கதையினைப் பரப்புவோர் முன்வைக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் சிவசிதம்பரத்தின் நினைவு நாள் நிகழ்வு கடந்த மாதம் கரவெட்டியில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. இதில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். இதற்குப் பின்னர்தான், வடக்கு – கிழக்கு இணைப்புக்கு மு.கா. தலைவர் ஆதரவு வழங்கவுள்ளார் என்கிற கதை, தீவிரமாகப் பரவத் தொடங்கியது.

கிழக்கு மாகாண முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையானோர் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிரான மனநிலையைக் கொண்டவர்களாகவே உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் சிங்களவர்களும் இவ்வாறானதொரு முடிவுடன்தான் இருக்கின்றார்கள். இதன்படி பார்த்தால், கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களில் 60 வீதத்துக்கும் குறையாதோர் வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிரானவர்களாகவே இருக்கின்றனர். ஆக, கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்னை மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், அந்த மாகாணத்தினை வடக்குடன் இணைப்பதென்பது, ஜனநாயக வழியில் சாத்தியப்பாடாகுமா என்கிற பாரிய கேள்வி இங்கு உள்ளது.

இது ஒருபுறமிருக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்புடன், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி அண்மையில் இணைந்து கொண்டமை குறித்து அறிவோம். பொதுத் தேர்தலில் அதாஉல்லா தோல்வியடைந்த பின்னர், அவருடைய அரசியல்  செயற்பாடுகள் தேக்கமடைந்திருந்தன. ஆனாலும், மைத்திரி தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்புடன் பங்காளியாக இணைந்து கொண்டதன் பிறகு, அரசியலில் அதாஉல்லா உற்சாகமடையத் தொடங்கியுள்ளார். இப்போது, அரசியலில் சூடுபிடித்திருக்கும் வடக்கு – கிழக்கு விவகாரத்தினை கையில் எடுத்தால், எல்லாத் தரப்பும் திரும்பிப் பார்க்கத் தொடங்கும் என்பதைப் புரிந்து கொண்ட அதாஉல்லா, வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு எதிராக ‘சுதந்திர கிழக்கு’ எனும் கோஷத்தினை முன்வைத்து, மக்கள் பேரணியொன்றினை விரைவில் நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் மற்றும் பொது இயக்கங்கள் தன்னுடன் கைகோர்க்க வேண்டுமென்றும் அதாஉல்லா அழைப்பு விடுத்திருக்கின்றார்.

‘வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்தல்’ என்கிற தமிழர் தரப்பின் கோரிக்கை தொடர்பில், மு.காங்கிரசின் தலைமை கடைப்பிடித்து வரும் மௌனமானது கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, வடக்கும் – கிழக்கும் இணைந்திருந்த மாகாணசபை நிருவாகமொன்றின் கீழ் வாழ்ந்த அனுபவம், கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு உள்ளது. அந்த அனுபவம் மிகவும் கசப்பானதாகும்.

எனவே, ‘சுதந்திர கிழக்கு’ எனும் கோசத்தை முன்வைத்து, முன்னாள் அமைச்சர் அதால்லா முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையானது, அரசியலில் பாரிய கவன ஈர்ப்பினைப் பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. மேலும், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் ஆதரவும் இதற்குக் கிடைக்கும். இந்த நிலையானது, மு.காங்கிசுக்கு பாரிய அரசியல் அசௌகரியத்தினை ஏற்படுத்தும். அதனால், வடக்கு – கிழக்கு விவகாரத்தில் தமது நிலைப்பாடு என்ன என்பதை, அறிவிக்க வேண்டிய கட்டாய நிலைக்குள் மு.கா. தள்ளப்படும்.

குறித்த ஒரு விவகாரத்தில் – நமது நிலைப்பாடு என்ன என்பதைச் சொல்வதற்காக, அது தொடர்பில் மற்றவரெல்லாம் தத்தமது நிலைப்பாடுகளை அறிவிக்கும் வரைக் காத்திருக்க வேண்டிய தேவை கிடையாது. அது அபத்தமானதாகும். ஆனால், புதிய அரசியல் யாப்புக்கான யோசனை, அரசியல் தீர்வுக்கான முன்மொழிவு, வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில், மேற்சொன்ன அபத்தத்தினையே மு.கா. கடைப்பித்து வருகிறது. இந்த நிலைப்பாடானது மு.கா. தலைமைக்கு நன்மையாக அமையாது.

வடக்கு மாகாணத்துடன் கிழக்கினை இணைப்பதால், கிழக்கு முஸ்லிம்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டால், கிழக்கு முஸ்லிம்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். கிழக்கில் வாழும் சிங்களவர்களின் நிலையும் இப்படித்தான் அமையும். இது தொடர்பில், புள்ளிவிபரங்களுடன் நிறையவே எழுதப்பட்டு விட்டன.

ஏற்கனவே, முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்துக்கு எதிராக கட்சியின் உள்ளேயும், வெளியிலும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. முஸ்லிம் காங்கிசுக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே தலைமை தாங்க வேண்டும் என்கிற கோசத்துடன் ‘கிழக்கின் எழுச்சி’ எனும் செயற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மு.காங்கிரசின் தலைவர், வடக்கு – கிழக்கை சொந்த இடமாகக் கொள்ளாதவர். மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர். இவ்வாறானதொரு நிலையில், ‘வடக்கு – கிழக்கு இணைப்பு’ என்கிற விவகாரத்தில் மு.கா. தலைமையானது ‘கத்தியில் நடக்க வேண்டியதொரு நிலை’ உருவாகியுள்ளது.

வடக்கு – கிழக்கு விவகாரத்தில் மு.கா. தலைமையின் மௌனம் அல்லது இரண்டுங்கெட்டான் நிலைவரம் குறித்து, மு.கா.வுக்கு எதிர் அரசியல் செய்யும் தரப்புக்கள் மிக நன்கு அறியும். வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு ஆதரவா, இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டிய நெருக்கடி நிலையொன்றுக்குள், அதால்லாஉவின் ‘சுதந்திர கிழக்கு’ என்கிற மக்கள் பேரணியானது, மு.கா. தலைவரை நிச்சயம் தள்ளிவிடும்.

கண்டு பிடித்த பிறகும், ஒளித்துக் கொண்டிருப்பதில் சுவாரசியங்கள் எவையுமில்லை.

நன்றி – தமிழ் மிரர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்