அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை

🕔 August 14, 2016

Namal - 033– க. கிஷாந்தன் –

நாட்டின் அடுத்த வரவு செலவு திட்டம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முன்வைக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, யுத்த காலத்தின் போது நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பில், அமெரிக்கா விசாரணைகளை மேற்கொள்ள – இன்றைய அரசு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கினிகத்தேனரஞ்சுராவ பிரதேசத்தில் அமைந்துள்ள பீடாஸ் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“நாட்டு மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளை தேடிg; பார்க்காத இந்த அரசாங்கம், கடந்த கால ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக தேடிப் பார்ப்பதற்கு பணத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றது.

மஹிந்தவின் குடும்பத்தினரையும், எங்கள் செயல்பாடுகளையும் எப்.சீ.ஐ.டீ. (FCID) என்ற ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, கோடி கணக்கில் பணத்தை செலவு செய்து ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.

ஊழல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இயக்கப்படும் எப்.சீ.ஐ.டீ. காரியாலயத்துக்குச் சென்றால், அங்குள்ள அனைத்து அறைகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவப்படங்களே காட்சியளிக்கின்றன.

மாகாண, மாவட்ட மற்றும் பிரதே ரீதியாக எதிர்வரும் காலத்தில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அதற்காக அங்குள்ள அமைப்பாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்களை உள்ளடக்கி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் அடுத்த வரவு செலவு திட்டத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் என்பதில் அச்சம் இல்லை.

நாட்டில் யுத்த காலத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பில், அமெரிக்கா விசாரணைகளை மேற்கொள்ள இன்றைய அரசு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.

இந்த வகையில் நமது நாட்டு ராணுவத்தினரை இந்த அரசாங்கம் காட்டிக்கொடுத்துச் செயல்படுகின்றது. ஆனால் எமது அரசாங்கத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகளை நம்நாட்டில் உள்வாங்குவதற்கு இடமளிக்கவில்லை.

ராஜபக்ஷவின் குடும்பத்தினர் மட்டுமன்றி, கடந்த ஆட்சியோடு இருந்தவர்கள் அனைவரும், நிம்மதியின்றி நித்திரை கொள்ளும் நிலைக்கு அரசாங்கத்தின் செயல்பாடுகள் காணப்படுகின்றது.

கினிகத்தேனையிலிருந்து கொழும்புக்கு சென்று, நேரடியாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்லும் நிலையினேயே அரசாங்கம் எம்மீது திணிக்கின்றது. பாத யாத்திரையின் போது, எமது கோரிக்கைகளை மக்களோடு இணைந்து கோஷம் இட்டுக்கொண்டிருக்கையில், கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தது.

அவர்கள் நினைத்தவாறு என்னை சிறைக்கு அனுப்பினர். இது அல்ல அரசாங்கத்தின் வேலை. மக்களுடைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்து மக்கள் சேவையை முன்னெடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றினால், உலக நாடுகள் நிதி உதவிகளை வழங்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கதுக்கே கூடிய அளவில் அபிவிருத்திக்கான நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் காலங்களில் இந்த ஆட்சியாளர்கள் கூறிய பொய்யான வாக்குறுதிகள், இன்று மக்களுக்கு நிறைவேற்றப்படவில்லை.

சமுர்த்தி முதியோர்களுக்கான உதவித் தொகை, அரச சேவையாளர்களுக்கான உதவிகள் கிடைத்திருக்கின்றனவா?

விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? இவை அனைத்தையும் செய்யாது, ஊழல் விசாரணை என்ற பெயரில் கோடி கணக்கில் பணத்தை செலவழிப்பது நியாயமற்றதாகும்.

கேகாலை அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளனவா? கொழும்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த அரசாங்கம் ஆளாகி உள்ள நிலையில், பழி வாங்கும் எண்ணங்களை கை விடுதல் வேண்டும்” என்றார்.

இந் நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க, அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ், தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.Namal - 022 Namal - 011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்