உடைத்து ஒட்டுதல்

🕔 August 13, 2016

Article - Nifras - 91
–  ஏ.எல். நிப்றாஸ் –

சிறுபிள்ளைகளின் விருப்பத்திற்குரிய ஒரு பொருளை விளையாடும் போது, சில வேளைகளில் அவர்களே கைதவறி உடைத்து விடுவார்கள். அது உடைந்ததும் அங்குமிங்கும் ஓடியோடி அழுவார்கள். ஏதோ வீட்டில் இருக்கின்ற மற்றவர்களே உடைத்து விட்டத்தைப் போலதான் அவர்கள் ஆர்ப்பரிப்பார்கள். ‘சரி இன்னுமொன்று புதிதாக வாங்குவோம்’ என்று தாய் தந்தையர் சொன்னாலும், இல்லை, அதே பொருள்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். இது எல்லா வீடுகளிலும் நடக்கும். இப்படியான சந்தர்ப்பங்களில், பசை எதுவும் இன்றி அல்லது ஒட்டாத திரவம் ஒன்றை பூசி அதைப் பொருத்திப் பார்த்து ஒட்டும் முயற்சியில் சிறுவர்கள் தோற்றுப் போவார்கள். முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்வாதிகளுக்கு இடையில் இருக்கும் உறவின் உடைவை ஒட்டும் முயற்சிகளும் இந்த நிலைமையில்தான் இருக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமுக்கும் செயலாளர் மற்றும் தவிசாளர் உள்ளிட்ட சிலருக்கும் இடையில் உள்முரண்பாடு கருக்கொள்ள தொடங்கி இம்மாதத்துடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகின்றது. எப்படியோ உருவான பிரச்சினை இப்போது எங்கேயோ வந்து நிற்கின்றது. இன்று தீரும் நாளை தீரும் என்று எதிர்பார்த்திருந்த உண்மையான கட்சி ஆதரவாளர்கள், மிகவும் கவலையுடன் மனம் உடைந்து போயிருக்கின்றார்கள். கட்சி இரண்டுபட்டதில் கூத்தாடிகளான சில மூன்றாந்தர அரசியல்வாதிகளுக்கு உள்ளுக்குள் கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனபோதும், எந்த சுயலாபமும் இல்லாமல் கட்சியின் நல்லது கெட்டதுகளில் உண்மையாக அக்கறை செலுத்துகின்ற மக்களுக்கு, இது தீராத மனக்கிலேசத்தை உண்டுபண்ணியிருக்கின்றது. ஆனால் நிலைமைகளில் ஆரோக்கியமான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

காட்சியுருப்படுத்தல்

மு.கா.வின் பெயரளவிலான செயலாளர் நாயகமாக இருக்கின்ற எம்.ரி. ஹசன்அலியை சமாளிப்பதற்கு தொடர்ந்து தூதுகள் அனுப்பப்படுவதைப் போலவும், தவிசாளர் பசீர் சேகுதாவூதை வழிக்கு கொண்டு வருவதற்கு தூதுகள் அனுப்பப்படுவதைப் போலவும், கட்சிக்குள் இருக்கின்ற ஜனநாயகம் சார்ந்த பிரச்சினைக்கு தீர்வுகாண திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதைப் போலவும், தேசியப்பட்டியலுக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதைப் போலவும், முஸ்லிம்களின் பிரச்சினையில் இதயசுத்தியுடன் செயற்படுவதைப் போலவும் – காட்சிகள் காண்பிக்கப்பட்டாலும், அவை உண்மையிலேயே நடக்கின்றது என்பதற்கான எவ்வித அத்தாட்சிகளும் தெரியவில்லை. இந்த காட்சியின் பார்வையாளர்களான பொதுமக்களை பராக்குக்காட்டி, காலத்தை இழுத்தடித்து, அவர்களே இவற்றையெல்லாம் மறந்து விடும் வரை இழுத்துக்கொண்டு போகின்ற செயற்பாடுதான் மு.கா.விற்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகின்றது.

ஹசன்அலியும் பசீரும் கடந்துபோன 16 வருடங்களாக, தலைவர் ஹக்கீமுடன் இருந்தவர்களே. இன்று வேறு வேறு திசைகளில் நின்றாலும் இவர்கள் எல்லோருக்கும் மு.கா.வின் செயற்பாடுகளில் பங்கிருக்கின்றது. ஹக்கீம் தவறிழைத்திருந்தால், மு.கா. யாப்பின் 3.1 உப பிரிவுக்கு பயந்து கொண்டு, அதனைப் பொறுத்துக் கொண்டிருந்த தவிசாளர், செயலாளர் மற்றும் எல்லோருக்கும் பங்கிருக்கின்றது. சிலருக்கு அதிகமாகவும் வேறு சிலருக்கு குறைவாகவும் பங்கிருக்கலாம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் சரிகளிலும் பிழைகளிலும் அவர்களும் பொறுப்பாளிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இன்றுபோல் அன்று நிலைமை இருக்கவில்லை. தலைவரை காப்பாற்றினாலேயே கட்சியை காப்பாற்ற முடியும் என்ற நிலைப்பாடு அப்போதிருந்தது. இதனால், மிகத் தந்திரமான முறையில் தலைவரை பசீர் காப்பாற்றி வந்திருக்கின்றார். சமகாலத்தில், மக்கள் மத்தியில் கட்சியின் இமேஜை ஹசன்அலி ஓரளவுக்கேனும் கட்டிக்காப்பாற்றி வந்திருக்கின்றார். வீட்டுக்குள் நடக்கின்ற சண்டையை வெளியில் காட்டிக் கொள்ளாத ஒரு பொறுப்புள்ள இல்லத்தரசி போல இவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் செயற்பட்டிருக்கின்றார்கள். இப்படியான நபர்களுடனேயே கட்சித் தலைமை இன்று முரண்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு ஊருக்குள்ளும் மு.கா.வின் பல பிரிவுகளை உருவாக்கி, ஆளுக்காள் மோதவிட்டு அதிலேயே அவர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்படியான ஒரு ஏற்பாட்டைச் செய்த றவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் கீழ்,  இப்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால் உயர்பீடமும் உடைந்து கொண்டிருக்கின்றது. தேர்தல் ஒன்றை நெருங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் இந்த முரண்பாடுகள் சீர் செய்யப்படாமல் இருப்பது இவற்றையெல்லாம் விடப் பாரதூரமானதாகும்.

முரணின் தோற்றுவாய்

இந்தப் பிரச்சினைகள் எங்கிருந்து தோற்றம்பெற்றன? எவ்வாறு வெளிக்கிளம்பின என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிகளே. செயலாளரின் அதிகாரங்களைக் குறைத்ததில் இருந்து, ஹக்கீமுடன் ஹசன்அலி முரண்படத் தொடங்கினார். தேசியப்பட்டியலில் கட்சியின் தவிசாளரும் செயலாளரும் ஓரங்கட்டப்பட்டமை இந்த முரண்பாட்டை வெளியில் கொண்டு வந்தது எனலாம். ஹசன்அலிக்கும் பசீருக்கும் எம்.பி. பதவி கொடுப்பதோ கொடுக்காமல் விடுவதோ வேறு விடயம், ஆனால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்திராத, கட்சியின் நேரடி அரசியலில் இயக்கப்பாட்டை கொண்டிராத நபர்களுக்கு அப்பதவியை கொடுத்தது தலைவரின் உள்மன நோக்கத்தை புரிந்து கொள்வதற்கு போதுமாக இருந்தது. எத்தனையோ கட்சியின் உறுப்பினர்களும் – ஊர்களும் தேசியப்பட்டியலுக்காக மாய்ந்து கொண்டிருக்க, தலைவர் இப்படி ஒரு முடிவை எடுத்ததையும், அதில் ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பவரை, ராஜினாமாச் செய்ய வைக்காமல் இருக்கின்றமையையும் எந்த சாணக்கியத்தின் பெயராலும் நியாயப்படுத்த முடியாது.

இப்படியாக முரண்பாடு ஆரம்பித்த போது, பசீர்சேகுதாவூத் தனக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை தேவையில்லை என்று அறிவித்தார். சற்று காலதமதமாகி, அதாவது எம்.பி. கேட்டு செயலாளர் அடம்பிடிப்பதாக ஹக்கீம் தரப்பினர் பெரிய பிரச்சாரங்களை மேற்கொண்ட பின்னரே நிலைமை எங்கே போகின்றது என உணர்ந்து கொண்டு ஹசன்அலி அறிக்கை விட்டார். ‘எனக்கு எம்.பி. தேவையில்லை. அட்டாளைச்சேனைக்கு வழங்குங்கள்’ என்று அவர் சொன்னார். ஆனால் இன்னும் அது நடைபெறவில்லை. கட்சிக்குள் ஏதாவது பிரச்சினை இருக்கின்றது. அதனாலேயே அதை உரியவர்களுக்கு வழங்க முடியாதிருக்கின்றது என்ற பிரமையை ஹக்கீம் தோற்றுவிக்க முற்படுகின்றார். ஆனால், சல்மானிடம் இருந்து கெஞ்சிக் கூத்தாடியே எம்.பி. பதவியை மீளப் பெற முடியும் என்பதும், அதைக் கூட அவ்வளவு காலகெதியில் சல்மான் விட்டுக் கொடுக்கமாட்டார் என்பதும், கட்சியின் உள்விவகாரங்களை அறிந்தோர் கூறும் தகவலாகும்.

இன்று தலைவரும் செயலாளரும் தவிசாளரும் இரண்டு அல்லது மூன்று மூலைகளில் நின்று கொண்டு, வார்த்தைகளால் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். தலைவர் தன்வழியிலும் தவிசாளர் தனிவழியிலும் செயலாளர் இன்னுமொரு கோணத்திலும் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். மு.கா.வின் தவிசாளர் பசீர் சேகுதாவூத், தலைவர் ஹக்கீமின் ராஜதந்திரி போல செயற்பட்டவர். ஹக்கீம் இக்கட்டான நிலைகளில் இருந்த போது அவருக்கு ஆலோசனைகளை வழங்கி அதிலிருந்து விடுவித்தவர். தலைமைத்துவம் செய்த சில தவறுகளுக்கு தானும் துணை போயிருந்ததாகவும் அதை, தான் இப்போது உணர்ந்திருக்கின்றேன் என்றும், அதற்கான பரிகாரத்தை தானும் தலைவரும் தேட வேண்டும் என்றும் அவர் தனக்கு நெருக்கமானவர்களுடன் கூறிவருகின்றார். அவர் என்னதான் தன்னிடம் தலைவர் பற்றிய ரகசியங்கள் எதுவுமில்லை என்று கூறினாலும், ஹக்கீமின் ரகசியங்கள் அதிகமாக யாரிடமாவது இருக்குமென்றால் அவர் பசீராகவே இருப்பார் என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அந்த ரகசியங்கள் பற்றிய கேள்விகளை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்காகவே அண்மைய நாட்களில் பகிரங்க மடல்களை பசீர் எழுதி வருகின்றார். இது ஹக்கீமுக்கு பெரிய தலையிடியாக இருக்கின்றது. பசீரைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும். பலமும் பலவீனங்களும் அறிந்தவர். எனவே, அவரை கையாள்வது மிகக் கடினம் என்பதையும் தலைவர் அறிந்திருப்பார். எனவே, தவிசாளரை விட்டு – சற்றே ஒதுங்கி நின்று, பலமான ஒரு எதிர் தாக்குதலை மேற்கொள்வதற்கே ஹக்கீம் பெரிதும் பிரயாசைப்படுகின்றார். சமகாலத்தில், பசீர் சமரசத்திற்கு வருவாரா என்பதை நாடிபிடித்து அறியும் கள ஆய்வுகளும் இடம்பெறுவதாக தெரியவருகின்றது.

இதேவேளை, பசீரைப் போல ஹசன்அலி பெரிதாக அறிக்கைகள் விடவில்லை. தலைவரை பயங்காட்டவும் இல்லை. எனவே, பசீரை விட ஹசனலியை கையாள்வது இலகு என்று மு.கா. தலைவர் நினைப்பதாக தெரிகின்றது. ஆனாலும், ஹசன்அலி எதற்கும் பிடிகொடுக்கின்றார் இல்லை என்பது அவருக்கு ஒரு சிக்கலாக இருக்கின்றது. வீட்டில் உள்ளவர்களுடன் சண்டைபிடித்துக் கொண்டு, ஒரு அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டு ஜன்னல்களை மட்டும் திறந்து வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நபரைப் போல – செயலாளர் இருப்பது, தலைவருக்கு புதிய அனுபவமாகும். ஆயினும், ஹசன்அலியை எப்படியும் சமரசப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அல்லது அவ்வாறான ஒரு பொய்த் தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.

பயனற்ற சந்திப்புக்கள்

இந்த மனக்கசப்பு ஏற்பட்ட பிற்பாடு, மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமும் செயலாளர் ஹசன்அலியும் பல தடவைகள் நேருக்குநேர் சந்தித்திருக்கின்றார்கள். ஆரம்பத்தில் ஹசன்அலியின் வீட்டுக்கு ஹக்கீம் சென்று சந்தித்தார். அதன்பின்னர் தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி இஷாக்கின் முன்னிலையில் அவரது வீட்டில் தலைவரும் செயலாளரும் இரண்டு தடவைகள் சந்தித்துள்ளனர். தலைவரின் வீட்டுக்கு ஹசன்அலி ஒரு தடவை சென்று சந்தித்தார். அதன்பிறகு அவ்வப்போது ஹக்கீம் தரப்பில் இருந்து சமாதானப் புறாக்களும் தூதுகளும் அனுப்பப்பட்டிருக்கின்றன. செயலாளரும் தன்பங்கிற்கு, புறாக்களின் காலில் சில தகவல்களை கட்டி அனுப்பினார்.

இவற்றுள் மிக முக்கியமான இரு சமரசப் பேச்சுக்கள் அண்மையில் இடம்பெற்றன. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட் கடந்த இருவாரங்களுக்குள் இரண்டு தடவைகளை இது விடயமாக ஹசன்அலியை சந்தித்துப் பேசியிருக்கின்றார். முதலாவது சந்திப்பின் இடையில் தலைவர் ஹக்கீமும் வந்து இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று திரும்புவதில் ஏற்பட்ட தாமதத்தால், அதில் கலந்து கொள்ளவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. இந்த சந்திப்புக்களில், தன்னை தலைவர் ஹக்கீம் அனுப்பியுள்ளதாகவே முதலமைச்சர் அறிமுகப்படுத்திக் கொண்டதாக ஹசன்அலி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், மீண்டும் தாறுஸ்ஸலாமுக்கு வந்து செயலாளருக்குரிய கடமைகளை செய்யுமாறும், தேசியப்பட்டியல் போன்ற விடயங்களையும் நீங்களே பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. தேசியப்பட்டியல் தொடர்பில் ஏற்கனவே மோசமான அனுபவத்தை பெற்றுள்ள செயலாளர், தேசியப்பட்டியல் பற்றி இப்போது கதைக்க தேவையில்லை. முதலில் செயலாளருக்குரிய அதிகாரங்களை ஒப்படையுங்கள் என்று சொல்லி அனுப்பியதாக மு.கா. தகவல்கள் கூறுகின்றன.

ஹசன்அலியை உள்ளே எடுத்துவிட்டால் ஒரு தலைவலி குறைந்து விடும் என்பது தலைவரின் எண்ணமாக இருந்திருக்கும். அதன்மூலம் வேறு பல உப நோக்கங்களையும் அவர் கொண்ருக்கலாம். குறிப்பாக, பசீர் சேகுதாவூதை தனிமைப்படுத்தல், ஹசன்அலி பதவியாசை பிடித்தவர் என்ற தோற்றப்பாட்டை மெய்ப்பித்தல், அதன்மூலம் எம்.பி.க்காக காத்திருந்தோரை செயலாளருக்கு எதிராக திருப்புதல், எதிர்வரும் தேர்தலில் கட்சிக்கு செயலாளரால் பிரச்சினை ஏற்படுவதை தடுத்தல், கிழக்கில் ஏற்பட்டுள்ள எழுச்சியை சற்று தணிவடையச் செய்தல் போன்ற பல நோக்கங்கள் தலைவருக்கு இருந்திருக்கலாம். ஆனால், செயலாளர் எதிலும் பிடிகொடுக்காமல் நழுவிச் செல்வது, ஹக்கீமுடைய எதிர்பார்ப்பை சிதறடித்துள்ளது எனலாம்.

எவ்வாறாயினும். கட்சிக்குள் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக, பலர் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். செயலாளருடனான இணக்கப் பேச்சுக்களுக்காக மூவர் கொண்ட குழுவொன்று முன்னமே நிறுவப்பட்டிருப்பதற்கு மேலதிகமாக உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி உடைந்து விடக் கூடாது என்பதும், தலைவர், செயலாளர், தவிசாளர் உள்ளடங்கலாக அனைவரும் ஓரணியில் இருப்பது பலமானது என்பதும் அவர்களுடைய எண்ணமாக இருக்கின்றது. இன்னும் சிலர் இருக்கின்றார்கள், அவர்கள் தலைவருக்கும் மற்ற இருவருக்கும் இடையில் பகைமூட்டிவிடுகின்ற வேலையை செய்கின்றனர். அங்கிருந்து கிடைக்கும் ஒரு தகவலை ஒன்பதாக்கி, புறம்பேசி திரிவது தலைவருக்குக் கூட தெரியும். ஹசன்அலிக்கு எம்.பி. வழங்கப்படாமல் தடுப்பதற்காக ஒரு குழு திட்டமிட்டு செயற்படுவதாக அறிய முடிகின்றது. இவர்கள் மூவரும் பிரிந்திருந்தால் நமக்கு லாபம். இதைவைத்து ஹக்கீமிடம் தமக்கு வேண்டியதை செய்து கொள்ளலாம் என்று இந்த பிரிவினர் கருதுகின்றார்கள் போலுள்ளது.

தலைவரின் கருத்து

ஆனால், மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது. கட்சியிக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் எல்லாம் களையப்பட்டு, முன்பிருந்த பலம்பொருந்திய நிலைக்கு மு.கா. மீள வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள். தமது குருதியிலும், வியர்வையிலும், கண்ணீரிலும் முளைத்த கட்சி இது. எனவே, இக்கட்சியின் ஆணிவேர்களும், கொள்கையும் காப்பாற்றப்பட்டு, பழைய மரமாக செழித்தோங்க வேண்டும் என்று போராளிகள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். போலியான போராளிகள் மாதிரி, உண்மையான போராளிகள் சுயநலனுக்காக இவ்விடயத்தை நோக்கவில்லை. அதுபோல, மக்களுக்கும் போராளிகளுக்கும் ஒரு நம்பிக்கையும் இருக்கின்றது. எதோ ஒரு அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது, மிக விரைவில் சமரசம் வந்துவிடும். எல்லாப் பிரச்சினைகளுக்கும் சாணக்கியமான முறையில் தீர்வு காணப்பட்டு விடும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அந்த எண்ணத்தில் மண்விழுந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்திருந்த மு.கா. தலைவர் ஹக்கீம், ‘சமரசப் பேச்சுவார்த்தைகள் எதுவும் கட்சியினால் மேற்கொள்ளப்படவில்லை. தனிப்பட்ட எவராவது அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகின்றனரா என்பது எனக்கு தெரியாது. சகல விடயங்களையும் உச்சபீடமே தீர்மானிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த பலருக்கும் தூக்கி வாரிப் போட்டது. இச் செய்திக்கு மறுப்பறிக்கை விடப்படாதவிடத்து, இதனை ஒருபாரதூரமான கருத்தாகவே கருத வேண்டியுள்ளது. ஏனெனில், கட்சியின் உயர்பீடத்தின் ஒப்புதலுடன் சமர முயற்சிகளுக்காக மூவர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு நியமிக்கப்பட்டது. இக்குழுவின் பணிகள் இடைநடுவில் முடங்கியிருக்கின்றன. இது தவிர தனிப்பட்டவர்களும் தலைவர் சொன்னதாக சொல்லியே – தூது வந்ததாக செயலாளர் கூறுகின்றார். இப்படியிருக்கையில், சமரசப் பேச்சுக்கள் இடம்பெறவே இல்லை என்று தலைவர் ஹக்கீம் சொல்வது என்னமாதிரியான அரசியல் என்று விளங்கவில்லை.

இணக்கப் பேச்சுக்களின் முடிவு என்னவென்று கட்சியின் ஆதரவாளர்களும் மக்களும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இப்படி தலைவர் அறிவித்தது, எல்லாவற்றத்தையும் பூச்சியத்தால் பெருக்குவதற்கு ஒப்பான செயலாகும். இவ்வாறு ஏன் அறிவித்தார் என்று இணக்கக் குழுவினரும், தலைவரின் பெயர் சொல்லி இணக்கப்பாட்டுக்கு முயற்சித்தவர்களும் பகிரங்கமாக இதை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இதன்மூலம், தனக்கு இணங்கிப்போக விருப்பமில்லை என்று தலைவர் கூற வருகின்றாரா? அல்லது வார்த்தை தவறிவிட்டாரா என்பதை அக்குழுவினர் அவரிடமே கேட்டுச் சொல்ல வேண்டும். ஒருவேளை, ஹசன்அலிக்கு எம்.பி.யை கொடுத்தால், அவருக்கு ஐ.தே.கட்சி ஓர்அமைச்சு, பிரதியமைச்சுப் பதவியைக் கொடுக்கலாம் என்று ஒரு கதை உலாவுகின்றது. அதனால் தனக்கு மேலும் சவால்கள் ஏற்படும் எனக் கருதி, முன்னைய நிலைப்பாட்டில் இருந்து ஹக்கீம் இப்போது பின்வாங்கியிருக்கலாம் என்றும் ஊகிக்க முடிகின்றது.

மு.கா. என்பது மக்களுக்குரிய கட்சி. எனவே, கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள், முரண்பாடுகள் கூடிய விரைவில் தீர்க்கப்பட வேண்டும். கட்சியின் வாக்கு வங்கிகள் பலப்படுத்தப்படும் சமகாலத்தில், அரசியல்வாதிகளுக்கான கட்சியாக அல்லாமல் மக்களுக்கான அரசியல் இயக்கமாக நிலைமாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில், தலைவருக்கும் செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோருக்கு இடையிலும் ஏற்பட்டிருக்கின்ற மனஉடைவு ஒட்டப்பட வேண்டுமென்றே பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அவர்களுடன் இணக்கத்துக்கு வருவதோ வராமல் விடுவதோ தலைவரினதும் உச்சபீடத்தினதும் தீர்மானமாகும். ஆனால் நிலைப்பாட்டில் தெளிவாக, உறுதியாக இருக்க வேண்டும். ஹசன்அலியுடனும் பசீருடனும் இணக்கப்பாட்டுக்கு இடமே கிடையாது என்றால் ஹக்கீம் அதை பகிரங்கமாக சொல்லி விட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டும். அதேபோல், சமரசத்தை விரும்பினால் அதில் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும். சமரசம் பேசுவதுபோல் ஒரு முகத்தையும், சமரசமே பேசவில்லை என்று இன்னுமொரு முகத்தையும் காட்டுவது கூடாது.

அரசியல்வாதிகளே, பேசிப் பேசியே காலம் வீணே போகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்