தங்க ஆடை அணிந்தவர், அடித்துக் கொலை
🕔 July 15, 2016
தங்கத்தால் ‘சேர்ட்’ செய்து – அதை அணிந்ததன் மூலம் உலக கவனத்தப் பெற்ற, இந்தியாவின் மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த தொழிலதிபர் தத்தாரே புகே என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
பிறந்தநாள் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றபோது, ஒரு கும்பலால் நேற்றிரவு, அவரின் மகன் எதிரில் அடித்துக் கொல்லட்டார்.
திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற மேற்படி பிறந்தநாள் விழாவுக்கு, நேற்று இரவு 11.30 மணியளவில் இவர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது 12 பேர் அடங்கிய கும்பல் இவர் மீது கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதில் தத்தாரே புகே பலியானார்.
இவருடைய மனைவி – புனே நகர மாநகராட்சி கவுன்சிலராகப் பதவி வகித்து வருகின்றார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஆங்கில புத்தாண் தினத்தில், இந்திய மதிப்பு 1.2 கோடிரூபாய் செலவில் 3.2 கிலோ தங்கத்தை உருக்கி, அதை ‘சேர்ட்’டாக அணிந்து தத்தாரே புகே வலம் வந்தார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களிலும் ஊடகத்திலும் வைரலாக பரவியதால், உலகம் முழுவதும் இவர் பிரபலமாகி இருந்தார்.
மேற்படி கொலை தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பொலிஸார், பண பரிவர்த்தனை தொடர்பான பிரச்சனையில் இவரை யாராவது அடித்துக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்துள்ள பொலிஸார், தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.