அதாஉல்லா அமைச்சராகிறார்; சிரேஷ்ட அரசியல்வாதி விட்டுக் கொடுக்கிறார்
(அஹமட்)
முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தமை காரணமாக, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பினை இம்முறை இழந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தமை மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்த ஐ.ம.சு.கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டமை போன்ற விடயங்கள், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்திருந்தன.
இந்த நிலையில், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்பில் பங்காளிக் கட்சியாக – அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் இணைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதாஉல்லாவும் – ஜனாதிபதி மைத்திரியும் கையெழுத்திட்டிருந்தனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே, அதாஉல்லாவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிரேஷ்ட முஸ்லிம் அரசியல்வாதியொருவர், தற்போது வகிக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமாச் செய்யவுள்ளதாவும், அந்த இடத்துக்கு – அதாஉல்லா நியமிக்கப்படவுள்ளதாகவும் பேசப்படுகிறது. தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்கும் சிரேஷ்ட முஸ்லிம் அரசியல்வாதிக்கு முக்கிய பதவியொன்றினை ஆட்சியாளர்கள் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்தே அதாஉல்லாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாஉல்லாவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சுப் பதவியொன்றினைப் பெறவுள்ளார் எனும் செய்திகளும் ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இவர்களுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவி வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் முன்னர் தீர்மானித்திருந்தபோதும், பின்னர், அரசுடன் இணைந்துள்ள மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக, தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்கும் எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.