பசீரின் அறிக்கையும், ஹக்கீமின் அச்சமும்

🕔 June 24, 2016

Article - Rifan - 985
ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பிரதிநிதித்துவ அரசியலிருந்து விடுபட்டு கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட இருப்பதாக, அறிக்கை ஒன்றின் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் காணப்படும் முரண்பாடுகளை கூர்மையடைச் செய்யும் எனலாம். மேலும், தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவப் பதவிக்கு பெரும்சவால்கள் அதிகரிக்கலாம்.

பசீர் சேகுதாவூத் தமது அறிக்கையில், ‘எனது தனிப்பட்ட அரசியல் நம்பகத்தன்மையைக் காத்துக்கொள்ளும் வகையில் பிரதிநிதித்துவ அரசியலில் இனியொருபோதும் ஈடுபடுவதில்லை என்ற கடினமான முடிவுக்கு வந்துள்ளேன். சமகால முஸ்லிம் அரசியலில் பதவிகளைப் பெறும் இலக்குகளற்ற ஒரு பாத்திரத்தின் மூலம் செயலாற்ற முடிவெடுத்துள்ளேன். பிரதிநிதித்துவ அரசியல்வாதியாக அன்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு கடைநிலை உறுப்பினராகவேனும் இருந்து கட்சியைத் தூய்மைப்படுத்தும் பணியில் தீவிரமான அரசியல் செயல்பாட்டாளனாக எனது எஞ்சிய வாழ்நாள் நெடுகிலும் இருக்க விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘நாடாளுமன்றம், மாகாணசபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் இனிவரும் காலத்தில் ஒரு வேட்பாளராக பங்குபற்றப் போவதில்லை என்றும், எந்தவொரு கட்சியின் தேசியப்பட்டியலிலோ, அல்லது எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களினால் வரும் வேறு ஏதேனும் முறையிலோ பாராளுமன்றத்திற்கோ மாகாண சபைக்கோ மக்கள் பிரதிநிதியாக செல்லப்போவதில்லை என்பதையும் பகிரங்கமாக அறியத்தருகிறேன்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரால் ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பிரதிநிதித்துவ அரசியலிருந்து விடுபட்டு கட்சியை தூய்மைப்படுத்துவதற்கான போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ள அறிக்கையானது தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஏற்கனவே இருக்கின்ற மன அழுத்தங்களை அதிகரிக்கச் செய்வதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதே வேளை, தலைவர் ஹக்கீமை தற்போது வழிநடாத்திக் கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். தலைவர் ரவூப் ஹக்கீமை வழி நடாத்துவதற்கு காலத்திற்கு காலம் ஒரு குழுவினர் செயற்பட்டு வந்துள்ளார்கள். இன்று புதிய குழுவினர் அவரை வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்கின்றோம்.

கட்சியின் தலைவருக்கு எதிராக செயலாளர் எம்.ரி.ஹஸன்அலியை தவிசாளர் பசீர் சேகுதாவூத்தான் வழி நடத்திக் கொண்டிருக்கின்றார். அவர் ஹஸன்அலிக்கு பின்னால் மறைந்திருந்து தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு சதி வலை பின்னிக் கொண்டிருக்கின்றார் என்றதொரு பிரச்சாரத்தை தலைவர் ரவூப் ஹக்கீம் சார்பானவர்கள் மேற்கொண்டிருந்த சூழலில் பசீர் சேகுதாவூத்தின் அறிக்கை அவர்களின் பிரச்சாரத்திற்கு புளியை கரைத்துள்ளது.

இந்தப் பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே பசீர் சேகுதாவூத் பிரதிநிதித்துவ அரசியலிருந்து விடுபட்டுள்ளார் என்பதனைக் காட்டுகின்றது. இதனை அவரின் அறிக்கை தெளிவாகக் காட்டுகின்றது. அதாவது, எனது தனிப்பட்ட அரசியல் நம்பகத்தன்மையைக் காத்துக்கொள்ளும் வகையில் பிரதிநிதித்துவ அரசியலில் இனியொருபோதும் ஈடுபடுவதில்லை என்ற கடினமான முடிவுக்கு வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளதன் மூலமாக அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சம்பந்தப்படுத்தி தனக்கு எதிரான பிரச்சாரத்திற்கு முடிவு கட்டியுள்ளார்.

மறு பக்கத்தில் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவ பதவிக்கும் சவாலை ஏற்படுத்தியுள்ளார். அவர் கடந்த 22.06.2016 புதன் கிழமை விடிவெள்ளிக்கு கருத்துத் தெரிவிக்கையில், புதியவர்களுக்கு இடமளிக்கப் போவதாகவும், அதற்கான போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரவூப் ஹக்கீம் பதவிகளை தாராளத் தன்மையுடன் விட்டுக் கொடுப்போடு நடந்து கொள்ள வேண்டுமென்று கடந்த வாரம் முதல் தான் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தெரிவித்துக் கொண்டு வருகின்றார். அதனை முதலில் பசீர் சேகுதாவூத் செயலில் காட்டியுள்ளார். பசீர் சேகுதாவூத்தின் இந்த குணத்தை ஏனையவர்களும் வெளிக்காட்டுதல் வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சில பினாமிகளின் பாட்டன் வீட்டுச் சொத்தல்ல. கட்சி தொடங்கிய 30 வருட காலத்திலும் பதவிகளில் இருந்து சமூகத்திற்கு குரல் கொடுக்காமல் சுயலாபத்திற்காக செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இன்றும் கட்சி மூலமாக பட்டம், பதவிகளை பெற்றுள்ளார்கள். அவர்கள் தங்களின் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக முண்டியடித்துக் கொண்டு மற்றவர்களுக்கு குழி தோண்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், சிலர் கட்சியின் வளர்ச்சிக்கு எந்தவொரு பங்களிப்பையும் செய்யாது பதவிகளையும், கோட்டாக்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் சமையல் அறை அமைச்சர்களாக (முவைஉhநn ஊயடிiநெவ) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருந்து கொண்டு கட்சியை தமது தேவைக்கேற்றவாறு வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த சமையல் அறை அமைச்சர்களுக்கு கட்சியின் போராட்ட வரலாறு முறையாக தெரியாது. இன்னும் சிலர் முரண்பாட்டாளர்களிடையே சீண்டி முடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களினால்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சீரழிந்து கொண்டிருக்கின்றது.

இதே வேளை, கட்சிக்கு கடந்த 30 வருடங்களாக அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் சிலர் கட்சியினால் எதனையும் அனுபவிப்பதற்கு இடமளிக்கப்படாதுள்ளது. ஆதலால், கட்சியில் இது வரை காலம் பதவிகளையும், சுகபோகங்களையும் அனுபவித்தவர்கள் புதியவர்களுக்கு வழி விட வேண்டும். புதியவர்களாவது முஸ்லிம் சமூகத்தின் உரிமை விடயங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுப்பார்களா என்று பார்க்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை மன்னித்து வாக்களிக்க முடியாது. அவ்வாறு வாக்களிப்பது முட்டாள்களின் செயலாகும். முஸ்லிம் சமூகத்தில் துறைசார்ந்த வல்லுநர்கள் பலர் இருக்கையில் வெறுங் கையுடன் புத்திஜீவிகளற்றதொரு சமூகம் என்று முஸ்லிம்களை காட்ட வேண்டியதில்லை.

இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அரசியலில் உள்ளவர்களை விடவும் பன்மடங்கு சமூகத்தைப் பற்றி சிந்திக்கக் கூடிய, செயலாற்றக் கூடிய பலர் முஸ்லிம்களில் உள்ளார்கள். ஆதலால், புதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பொறுப்பை கையளிக்க இன்றுள்ளவர்கள் முன் வருதல் வேண்டும். இதனை முதலில் செயலில் காட்டியுள்ள பசீர் சேகுதாவூத்திற்கு நன்றிகளை தெரிவிக்க முஸ்லிம் சமூகம் கடமைப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலம் சுயநல கும்பலின் கைககளில் மாட்டியுள்ளது. இதனால்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கில் தலைமை உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்து கொண்டிருப்பதற்கும் காரணமாகும். இக்கோரிக்கை நீண்ட கால அவதானிப்பின் எழுச்சியாகும். இதே வேளை, இக்கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையில் தலைவர் ரவூப் ஹக்கீமை சுற்றியுள்ள பிணாமிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. அவர்கள் ரவூப் ஹக்கீமுடன் விசுவாசமாக உள்ளவர்களிடம் கூட கிண்டலாக நீங்கள் கிழக்கிற்கு தலைமை வேண்டுமென்று கேட்கின்றீர்கள். உங்களினால் முடியுமா? உங்களிடம் தலைவர்கள் உள்ளார்களா? உங்களுக்கு நாங்கள் உதவி செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொள்கின்றார்களாம். இத்தகையவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஆலவிருட்சமான கட்சியை ஆரம்பித்து அக்கட்சியின் கீழ் அதிகபட்சமான முஸ்லிம்களை ஒன்று திரட்டிய பெருமையும் கிழக்கு மண்ணில் பிறந்த மர்ஹும் எம்.எச்எம்.அஸ்ரப்பையே சாரும் என்ற உண்மையை மறந்து விட முடியாது. அவரின் அந்த முயற்சியினால்தான் இன்று பாராளுமன்ற கதிரையை கனவில் கூட நினைத்துக் கொள்ள முடியாதவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்கள். இதனை கிழக்கு வாதம் என்று கருத முடியாது. கிழக்கை புறக்கணிக்கும் பினாமிகளின் புரிதலுக்காக என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு யாரும் தலைவராக இருக்கலாம். ஆனால், அவர் முஸ்லிம்களின் தலைவராக செயற்பட வேண்டும்.

இன்றுள்ள முஸ்லிம் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் பதவிகளைப் பற்றியே சிந்திக்கின்றார்கள். யாராவது ஒருவர் இவர்களின் ஒவ்வாத நடவடிக்கைகளை சுட்டிக் காட்டினால், விமர்சித்தால் அவர்களை கட்சிக்கு எதிரானவர்கள் என்று காட்டுவதற்கு எடுக்கும் பிரயத்தனம் சொல்லில் அடங்காது. இதனையும் பசீர் சேகுதாவூத் தமது அறிகையில் தெரிவித்துள்ளார். அதாவது, முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் சமுதாய ஈடேற்றம் பற்றிய பிரக்ஞையற்று பதவிகளையும், சலுகைகளையும் சௌகரியங்களையும் குறிவைத்தே அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனம் முஸ்லிம் குடிமைச் சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றது. இதுமாத்திரமன்றி எந்தவொரு அரசியல் கட்சியிலும் எவரும் நேர்கோட்டை வரைய முற்படுகின்ற போதெல்லாம் பதவிகளை நாடிய மூன்றாந்தர நடவடிக்கைகளாக அவை சோடித்துக் காட்டப்பட்டு நேரிய மாற்றங்களுக்கான முயற்சிகள் தோற்கடிக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார். இதற்காக பசீர்சேகு தாவூத் ஒரு உத்தமர் என்று சொல்ல முற்படவில்லை. அவரது கருத்துக்களில் உள்ள உண்மைகளை தொட்டுக்காட்ட விளைகின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பதவிகளை விட்டுக் கொடுத்து தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும், கட்சியின் ஆதரவாளர்களினால் நிராகரிக்கபட இருந்தவர்களை தேர்தலில் போட்டியிடச் செய்து மக்களின் விருப்பத் தெரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை மீண்டும் பாராளுமன்ற அனுப்பியமை எந்த வகையில் தாராளத் தன்மையாக அமையும். தாராளத் தன்மை என்பது பதவிகளை விட்டுக் கொடுப்பது என்பதனை விடவும், மக்களின் செல்வாக்கை இழந்து கொண்டிருப்பவர்கள் தாராள மனத்தோடு விலகிக் கொள்வதே சிறந்தாகும். இதற்கு மாற்றமாக கட்சிக்குள் சிலரை ஒதுக்கி வைப்பதற்காக தராளத் தன்மை என்ற பதம் கையாளப்படுமாயின் தலைவர் பதவியும் தாராளத் தன்மையுடன் விட்டுக் கொடுக்க வேண்டும்.

மஹிந்தராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் முஸ்லிம்களுக்கு பல துன்பங்கள் ஏற்பட்டன. அவற்றை இல்லாமல் செய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எந்த முஸ்லிம் கட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கு தாவிச் சென்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் செல்வதற்கு முற்பட்டார்கள். கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக படுகுழியில் விழுந்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது. கட்சியின் தன்மானத்தை அடகு வைப்பதற்கு முற்பட்டவர்களுக்கு கடந்த பொதுத் தேர்தலில் வாய்ப்பு வழங்கியமை எதற்காக? இதுவும் தாராளத் தன்மையா? இந்த வாய்ப்புக் கூட கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கை என்றுதான் சொல்லப்படுகின்றது. அப்படியாயின் இன்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களில்தான் கட்சி தங்கியுள்ளதா என்று கேட்கின்றோம். கடந்த காலங்களில் கட்சியை விட்டுப்பலர் சென்ற போது கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஏன் இன்று கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் உள்ளார்கள் என்று சொல்ல முடியவில்லை. கட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற மந்திர வார்த்தைக்குப் பின்னால் உள்ள சுயநலம் என்னவென்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முரண்பாடுகளின் கூடாரமாக இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமக்குள் காணப்படும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு வருடம் கழிந்தும் முடியாது திண்டாடிக் கொண்டிருக்கின்றது. கட்சியின் செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோர்கள் தலைவருடன் முரண்பாடுகளுடன் உள்ளார்கள். பிரதேசத்தங்களில் உள்ளுர் அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்களிடையே பலத்த முரண்பாடுகளும், பிளவுகள் காணப்படும் நிலையில் சமூகம் சார்ந்த மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கொள்ளுமாறு ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளமை எந்த வகையில் சாத்தியமாகும். முதலில் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் சுற்றுப் புறச் சூழலை சுத்தப்படுத்த வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் வீட்டுக்குள் அசுத்தங்களும், ஆரவாரங்களும் காணப்படுவதனை எப்போது இல்லாமல் செய்வது. இதனைச் செய்யாது விடுக்கப்படும் அழைப்புக்கள் வீண் வார்த்தைகளாகும்.

கடந்த காலங்களில் அதாவது கட்சியின் செயலாளர் ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்கள் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பிரியமாக இருக்கின்ற போதே கட்சியின் கட்டமைப்பு சீர்குழைந்து காண்ப்பட்டது. இது பற்றி கட்சியின் அடிமட்ட போராளிகள் முதல் செயற்பாட்டு உறுப்பினர்கள் வரை கேள்வி கேட்ட போதெல்லாம் கட்சியின் கட்டமைப்பு இந்த வருடத்திற்குள் புனரமைக்கப்படும், இன்னும் மூன்று மாதங்களின் பின்னர் புனரமைக்கப்படும், பொதுத் தேர்தல் முடிந்ததும் புனரமைக்கப்படும், தேர்தல் முடிந்ததும் வீட்டுக்குவீடு முஸ்லிம் காங்கிரஸ் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டதே அன்றி நிறைவு செய்து காட்டப்படவில்லை. இதனால், கட்சியின் கட்டமைப்பு வெகுவாக பாதிக்கப்பட்டது. இன்று கட்சியின் கட்டமைப்பு படுமோசமாகவுள்ளது. தலைவருடன் ஒரு கூட்டம். தவிசாளர் மற்றொரு பக்கம், செயலாளர் இன்னுமொரு திசையில் என்று ஆளுக்கு ஆள் குழுக்களை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் கட்டமைப்பு அதன் 30 வருட கால வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பாதிக்கபட்டுள்ளது. இது சரி செய்யப்படாது போனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று தேசிய கட்சியில் சங்கமித்து மறைந்து கொண்டிருக்கும் நிலையே நிரந்தரமாகிவிடும்.

இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தேசிய கட்சியில் குறிப்பாக ஐ.தே.கவுடன் முழுமையாக சங்கமிக்க வைத்துவிட்டு தங்களின் அரசியலை நிலைநிறுத்திக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்திற்குத்தான் முஸ்லிம் காங்கிரஸ் பொறுத்தம். இதற்கு அப்பால் தேசிய கட்சிகளில்தான் முஸ்லிம்கள் அரசியல் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றார்கள். இதில் யதார்த்தம் இருந்தாலும் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பலம் ஏனைய மாகாண முஸ்லிம்களின் பாதுகாப்புக்கும், அபிவிருத்திகளுக்கும் அவசியமாகும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இயங்குவதனையும், ஒரு சிலருக்காக முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதனையும் ஏற்றுக் கொள்ள முடியாதென்பதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உண்மைப் போராளிகளின் எண்ணமாகும்.

இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்டுள்ள சுயநலம் கலந்த முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மற்றுமொரு சுயநலக் கும்பல் ரவூப் ஹக்கீமின் கைகளை கட்டிப் போட்டுள்ளதால் கட்சிக்குள்ளும், கட்சியின் ஆதரவாளர்களிடையேயும் அஸ்ரப் சார்புக்காரர்கள், ரவூப் ஹக்கீம் சார்புக்காரர்கள் என்ற பெரிய பிளவு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சுற்றியுள்ள சகல சுயநல முட்கம்பி வேலிகளும் அகற்றப்பட வேண்டும்.

நன்றி: விடிவெள்ளி (24 ஜுன் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்