சாய்ந்தமருது தோணா அருகில் மீண்டும் குப்பை; சுத்தப்படுத்துவதில் கல்முனை மாநகரசபை அசமந்தம்
– எம்.வை. அமீர் –
சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள தோணவினை புனர் நிர்மாணம் செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், தோணாவினை அண்டிய பகுதிகளில் மீண்டும் கழிவுகள் வீசப்பட்டு வருவதாக – அப் பிரதேச அக்கறையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றஊப் ஹக்கீம், தனது அமைச்சின் மூலம் 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், சாய்ந்தமருது தோணாவினை அபிவிருத்தி செய்யும் பணியினை அண்மையில் ஆரம்பித்து வைத்திருந்தார். இதற்கமைய, இப் பணியின் முதலாம்கட்ட வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், குறித்த தோணாவை அண்டிய பிரதேசங்களில் மீண்டும் கழிவுகள் வீசப்படுவது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இயக்குநரும் அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனியின் நேரடிக் கண்காணிப்பில், நகர அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த தோணா அபிவிருத்தி பணிகளை, சாய்ந்தமருதுப் பிரதேச மக்கள் நன்றியுடன் நோக்குகின்றனர்.
தோணாவினை அண்டி வாழும் மக்கள் – முன்னர் இப்பகுதியில் கழிவுகளை வீசி வந்தபோதும், தோணா – புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து, இப் பகுதியில் கழிவுகளைக் கொட்டுவதை ஓரளவு நிறுத்தியிருந்தனர். அதேவேளை, கல்முனை மாநகரசபையினரும் – தோணாவை அண்டிய பிரதேசங்களில் தினமும் கழிவுகளை அகற்றி வந்தனர்.
ஆனால் தற்போது – இப் பகுதியிலுள்ளவர்கள் மீண்டும் தோணாவின் அருகில் கழிவுகளை வீச ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, கல்முனை மாநகரசபையும் இப் பகுதியில் கழிவுகளை அகற்றும் தினங்களை குறைத்துள்ளது.
எனவே, சாய்ந்தமருது தோணா – மீண்டும் அசுத்தப்படக்கூடிய அபாயத்தை உடன் தவிர்ப்பதற்காக, சம்மந்தப்பட்ட பிரதேச மக்கள், கல்முனை மாநகரசபை, கல்முனை பொலிஸ் சுற்றுச்சுழல் பாதுகாப்புப்பிரிவு மற்றும் சாய்ந்தமருது பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் முன்வரவேண்டுமென, சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்வதில் அக்கறையுள்ள அனைவரும் வேண்டி நிற்கின்றனர்.
தோணாவை சுத்தமாக பாதுகாப்பது தொடர்பில், முழு சாய்ந்தமருது மக்களுக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது. மேலும், தோணாவினை அண்டிய பகுதியல் கழிவுகள் தேங்காமல், கல்முனை மாநகரசபையினர் கழிவுகளை அகற்றவேண்டியதுடன், கல்முனை பொலிஸ் சுற்றுச்சுழல் பாதுகாப்புப்பிரிவு தினமும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு சுற்றுச்சுழலுக்கு தீங்கான முறையில் அசுத்தங்களை வீசுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை சாய்ந்தமருது பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் அவர்களுக்கான பணிகளை தீவிரப்படுத்தவேண்டும்.
ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், சாய்ந்தமருது தோணா அபிவிருத்தித் திட்டத்தை சுத்தப்படுத்துவதுடன் நிறுத்திவிடாது, தோணாவின் இரு ஓரங்களிலும் பாதுகாப்பு சுவர்களை அமைத்து – வீதிகளை புனரமைப்பதோடு, மின்சார வசதிகளை ஏற்படுத்தி, மரங்கள் நட்டு, பொழுதுபோக்கு இடமாக மாற்ற வேண்டுமென இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.