நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு
நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமையை ஏற்றுக்கொள்வதாகவும், இதுகுறித்து தான் கவலையடைவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பட்டயக் கணக்காளர்களின் ஸ்தாபகர் தின நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்;
“அரசாங்கத்தினால் அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், வரி நிவாரணங்களை வழங்குவதே அவசியம் என்பது தெரியவந்துள்ளது. எனினும், பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்காகவே நாம் வரி அதிகரிப்பை மேற்கொண்டோம்.
நாட்டில் கொள்கை மாற்றங்கள் பாரியளவில் இடம்பெறாத போதிலும், மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்கள் இரண்டு, மூன்று தசாப்தங்களுக்கு நீடிக்கும். காலத்திற்குப் பொருந்தாத மற்றும் தேவையற்ற கொள்கைகளை மாற்றுவதற்கு நாம் முயற்சிக்கின்றோம்.
தற்போது அதிகளவிலான வரி காணப்படுகின்றமையை நான் அறிவேன். நாட்டில் 42 வகையான வரி மற்றும் கட்டணங்கள் இருக்கின்றன. இவற்றைக் குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். எனினும், அதற்கு சிறிது காலம் அவசியமாகும். எதிர்வரும் சில மாதங்களுக்குள் பொருளாதாரத்தை வலுவான பொருளாதாரமாக மாற்றுவோம்” என்றார்.