கல்முனையில் சுகாதாரமற்ற 13 ஹோட்டல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கல்முனை நகர் பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று சனிக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, சுகாதாரமற்ற வகையில் செயற்பட்ட 13 ஹோட்டல்கள் அடையாளம் காணப்பட்டன.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி. பேரம்பலம் தலைமையில் கல்முனைப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 13 ஹோட்டல்களின் உரிமையாளர்கள் மீதும், நாளை மறுதினம் திங்கட்கிழமை வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறினர்.
மேற்படி 13 ஹோட்டல்களில் மிக மோசமான சுகாதார அச்சுறுத்தல் நிலவுகின்ற 03 ஹோட்டல்களை மூடி விடுவதற்கான உத்தரவினை நீதிமன்றில் கோரவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்வரும் நோன்பு மாதத்தினை முன்னிட்டு, இந்த திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.