சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையை வலியுறுத்தி, ஹர்த்தால் கடையடைப்பு

🕔 June 13, 2015

Harthal - 01– அஸ்லம் எஸ். மௌலானா –

சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி,  திங்கட்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால், கடையடைப்பினை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம்,  நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொது மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

இதற்கான அழைப்பை விடுத்து, இந்த அமைப்பினால் – பிரதேசம் எங்கும் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், அரச அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமையன்று – அனைத்து வர்த்தக நிலையங்கள், கடைகள், அரச, தனியார் நிறுவங்கள் மற்றும் பாடசாலைகள் அனைத்தையும் திறக்காதிருப்பதுடன், பொது மக்கள் அனைவரும் அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு சாய்ந்தமருது ஜும் ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு அணி திரண்டு வருமாறும் மேற்படி அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பள்ளிவாசலில் – சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை பிரகடனம் செய்யப்பட்டு, விசேட தொழுகையும் துஆப் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய உறுதியளித்து பல மாதங்களாகியும், அது இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் கல்முனைத் தொகுதியின் அரசியல் தலைமையும் தடையாக இருக்கின்றன என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது.

இவர்கள் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள போதிலும், அதனை மழுங்கடிக்கும் வகையிலும் தம்மை ஏமாற்றும் வகையிலும் செயற்படுவதாகவும், இனி மக்களே தீர்ப்பாளர்களாக மாறுவார்கள் எனவும் தெரிவித்து – பள்ளிவாசல் நிர்வாகம், இரண்டு பக்க துண்டுப்பிரசுரம் ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்