தனியான கல்வி வயலம் தொடர்பில் இனரீதியாக அச்சம் கொள்ளக் கூடாது: எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு

🕔 May 25, 2016

Subair - MPC - 012– றியாஸ் ஆதம் –

னியான கல்வி வலயங்களை உருவாக்கும் போது, அவை தொடர்பில் இனரீதியாகச் சிந்தித்து, யாரும் அச்சம் கொள்ளக் கூடாது என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

மேலும், குச்சவெளி மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கு தனியான கல்வி வயலங்களை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம், அப்பிரதேசங்களின் கல்வித் தேவைகளை நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண சபையின் 59வது அமர்வு நேற்று செவ்வாய்கிழமை தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையினால் முன்வைக்கப்பட்ட – இறக்காமம் கோட்ட ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே உறுப்பினர் சுபையிர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்;

“மாகாண சபை உறுப்பினர் அன்வரினால் இந்த சபையிலே முன்வைக்கப்பட்ட குச்சவெளி தனி கல்வி வலயம் அமைப்பது தொடர்பான பிரேரணையில் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. குறிப்பாக 2005ஆம் ஆண்டு நாங்கள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அமைக்க முற்பட்டபோது, சிலர் அரசியல் ரீதியாகவும், இனரீதியாகவும் தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

ஆனால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது 2011 – 2013 ஆண்டு காலப்பகுதியில் தேசிய ரீதியில் முதலிடத்தினைப் பெற்று, கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்த்ததை இந்த இடத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

தனியான கல்வி வலயம் உருவாக்குதல் என்பதை இனரீதியாக சிந்திக்காமல், குச்சவெளி மற்றும் பொத்துவில் போன்ற பிரதேசங்களில் தனியான கல்வி வலயங்களை அமைப்பதன் மூலம், அப்பிரதேசங்களின் கல்வி ரீதியான தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும்.

விசேடமாக எமது மாகாணத்திற்கு கிடைக்கின்ற வளங்களை சரியாக பங்கிட்டு பின்தங்கிய பாடசாலைகளின் கல்வி நிலையை முன்னேற்ற முடியும்.

கடந்த மாகாண சபை ஆட்சியின் போது, முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரக்காந்தன் – மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை உருவாக்குவதற்கு உறுதுனையாக  இருந்தார். இப்போது அக்கல்வி வலயம் சிறந்த முறையில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதேபோன்று, இன்று தனியான கல்வி வலயம் அமைப்பது தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறன. எனவே, இவற்றினைக் கவனத்திற்கொண்டு மாகாண சபையில் ஒரு குழுவை நியமித்து, பாடசாலைகளை பிரித்து வலயங்கள் அமைப்பதில் எந்தப்பிரச்சிணையுமில்லை.

எமது மாகாணத்திலே கல்வி அமைச்சராக இருக்கின்றவர் கடந்த காலங்களில் ஒரு அதிகாரியாகவிருந்து கல்வித்துறைக்கு அரும்பங்காற்றியுள்ளார். குறிப்பாக, ஏறாவூர் பிரதேசத்திலும் ஆசிரியராக சில வருடகாலம் பணியாற்றியுள்ளார். ஆகையால் கல்விச் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சிணைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்