கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, சேவையிலிருந்து இடைநிறுத்தம்
கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, அவரின் பதவியிலிருந்து நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
நீதவான் திலின கமகே, சட்டவிரோதமாக தன்வசம் யானையொன்றை வைத்திருந்தார் என்று, சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டமையினை அடுத்து, நீதிச் சேவை ஆணைக்குழு இந்த முடிவினை எடுத்துள்ளது.
மேற்படி இடைநிறுத்தம் தொடர்பாக திலின கமகேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, நீதிச் சேவை ஆணைக்குழு தரப்புகள் தெரிவிக்கின்றன.
உரிய ஆவணவங்கள் எவையுமின்றி, நீதவான் திலின கமகே – தன்வசம் யானை ஒன்றினை வைத்திருப்பதாக அண்மையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வு முன்னிலையில் ஆஜராகி, வாக்கு மூலம் ஒன்றினை வழங்குமாறு, திலின கமகேவுக்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய உத்தரவு வழங்கியிருந்தார்.
ஆயினும், கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே – குற்றப் புலனாய்வு பிரிவு முன்னிலையில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.