தலைப்புச் செய்திகள்

அமைச்சர் லால்காந்தவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாடு

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லல்காந்தவின் சொத்துகள் குறித்து விசாரணை நடத்துமாறு, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் – ‘லஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி’ எனும் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவருக்கு நேற்று முன்தினம் (23) அனுப்பிய கடிதத்தில், அமைச்சர் லல்காந்தவின் கடந்த ஆண்டு (2025) மற்றும் இந்த ஆண்டுக்கான (2026) சொத்து மற்றும் பொறுப்புகள் குறித்த பிரகடனங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், அவர் சொத்துகளைச் சேர்த்த விதம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், அந்த அமைப்பின் தலைவர் கமன்த துஷார குறிப்பிட்டுள்ளார்.

கடுவெலையில் தான் கட்டிய வீட்டை, தனது பூர்வீகச் சொத்துகளை விற்ற பணத்தைக் கொண்டே கட்டியதாக லல்காந்த முன்னதாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது 2025-ஆம் ஆண்டுக்கான பிரகடனத்தில், அவர் 2024-ஆம் ஆண்டில் கடன் பத்திரங்கள் (promissory notes) மூலம் பணம் பெற்றிருப்பதும், 2025-ஆம் ஆண்டில் வீடு கட்டுவதற்காகத் தனியாகக் கடன் வாங்கியிருப்பதும் காட்டப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

மேலும், 2026-ஆம் ஆண்டுக்கான பிரகடனத்தில், லல்காந்தவுக்குச் சொந்தமான காணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும், அவரது குடும்பத்தினர் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை கூடியிருப்பதும் தெரியவருவதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவரது மனைவி 2025-ஆம் ஆண்டில் கடுவெல பகுதியில் ஒரு நிலத்தை வாங்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் பெறப்பட்ட தனிநபர் கடன், 2025-ஆம் ஆண்டுக்கான பிரகடனத்தில் காட்டப்பட்டிருந்த போதிலும், 2025-இல் பெறப்பட்ட வீட்டுக் கடன், 2026-ஆம் ஆண்டுக்கான பிரகடனத்தில் இடம்பெறவில்லை என்பதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த முரண்பாடுகளைக் கருத்தில் கொண்டு, லல்காந்தவும் அவரது குடும்பத்தினரும் தங்களது சொத்துகளைச் சட்டப்பூர்வமான வழிகளில் சேர்த்தனரா அல்லது அமைச்சருக்கான அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்திச் சேர்த்தனரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு, ஆணைக்குழுவிடம் அந்த அமைப்பு கோரியுள்ளது. மேலும், ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதே அமைப்பு கடந்த ஆண்டு லஞ்ச, ஊழல் முறைப்பாடுகளை விசாரிக்கம் ஆணைக்குழுவிடம், முறைப்பாடு ஒன்றை வழங்கி, வேறு சில அமைச்சர்களின் சொத்துகள் குறித்து விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது.