
– தில்சாத் பர்வீஸ் –
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 06 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (17) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது – சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட இளைஞரைச் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, அவரது உடமையிலிருந்து – குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிகாட்டலிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



