தலைப்புச் செய்திகள்

சாய்ந்தமருது பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்தவர் கைது

– பாறுக் ஷிஹான் –

கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி – சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரை சாய்ந்தமருது பொலிஸார் நேற்று (17) மாலை கைது செய்தனர்.

அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது, சந்தேகநபர் கைதானார்.

சம்பவ தினத்தன்று மாவடிப்பள்ளிப் பகுதியில் இருந்து சாய்ந்தமருது பகுதி நோக்கி, மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தப்பட்ட போது குறித்த 35 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்தனர்.

கைத்தொலைபேசி ஊடாக குறுஞ்செய்திகளைப் பரிமாறி, மிகவும் நுணுக்கமான முறையில் இச்சட்டவிரோத வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான சந்தேகநபரைச் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை இன்று(18) சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.