தலைப்புச் செய்திகள்

சிறையிலுள்ள பௌத்த பிக்குகளின் ஆடை விதிமுறையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தம்: நீதி அமைச்சர் அறிவிப்பு

சிறையிலுள்ள பௌத்த பிக்குகள் – நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ சிறையிலிருந்து வெளியேறும்போது, தங்கள் ஆடைகளை அணிய அனுமதிக்கும் வகையில், சிறை விதிமுறைகளில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், கலகொட அத்தே ஞானசார தேரரின் ஆடைகள் அகற்றப்பட்டமை குறித்து, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் மூன்று பௌத்த நிகாயங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முன்மொழிவுகள் வந்துள்ளன.

நீதி அமைச்சல் இன்று (14) உரையாற்றிய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, தற்போதுள்ள சிறைச்சாலை கட்டளைகளில் திருத்தங்களைப் பரிந்துரைத்து, தனது இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, சிறைத் தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகள், சம்பந்தப்பட்ட பௌத்தப் பிரிவு அல்லது நிகாயம் – வேறுவிதமாக உத்தரவிடாத வரையில், சிறையிலிருந்து வெளியேறும்போது தங்கள் ஆடைகளை அணிய அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், ஒரு பிக்கு சிறையில் அடைக்கப்படும்போது – அவரது ஆடைகள் அகற்றப்படுவது குறித்து பௌத்த விவகாரங்கள் திணைக்களத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறையை அறிமுகப்படுத்த, நிலையான கட்டளை 356-ஐத் திருத்தவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.

சிறைச்சாலை திணைக்கள ஆணையாளருக்கு, திணைக்களத்துடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

இதேபோன்ற விதிகள், தகுந்த மாற்றங்களுடன், மற்ற மதங்களைச் சேர்ந்த மதகுருமார்களுக்கும் பொருந்தும் என்றும் அமைச்சர் கூறினார்.

குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப – தொடர்புடைய நிலையான கட்டளைகளைத் திருத்துவதற்கான அறிவுறுத்தல்களுடன், இடைக்கால அறிக்கை ஏற்கனவே தற்காலிக சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் உள்ள மதகுருமார்கள் நடத்தப்படும் விதம் குறித்து மூத்த பௌத்த பிக்குகள் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

பௌத்த மதத் தலைவர்களுடனான கலந்துரையாடல்களின் போது, இரண்டு வாரங்களுக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக அமைச்சர் கூறினார்.

இந்தத் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.