தலைப்புச் செய்திகள்

ஷிரந்திக்கு இருதயத்தில் திறந்த அறுவை சிகிச்சையா?: உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு, கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவில் – திறந்த இருதய அறுவை சிகிச்சை (open-heart surgery) செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் இன்று (13) நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதற்கமைய, இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

‘சிறிலிய சவிய’ (Siriliya Saviya) கணக்கு தொடர்பான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து, லஞ்ச அல்லது ஊழல் பற்றிய விசாரணைக்கான ஆணைக்குழு – முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின்போது ஷிரந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிறைக்காவலில் இருந்த ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நேற்று (12) திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

அவருக்கு இன்று திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், வழக்குத் தொடுப்பாளர் தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், குற்றம் சாட்டப்பட்டவர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என்பது குறித்த எந்தத் தகவலும் சிறைச்சாலை அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கமைய, ஷிரந்தி ராஜபக்ஷவுக்குத் திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதா என்பதை உடனடியாக உறுதிப்படுத்தி, அது குறித்த தகவலை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு பிரதம நீதவான் – சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பகிரங்க நீதிமன்றத்தில் உத்தரவிட்டார்.

விசாரணையின்போது, ​​சிறைச்சாலை அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையில், அவர் தேசிய வைத்தியசாலையின் 61-வது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் மட்டுமே இருந்ததை நீதவான் சுட்டிக்காட்டினார். அவரது உடல்நிலை அல்லது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறதா என்பது குறித்த எந்தத் தகவலும் அதில் இல்லை என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை வழக்கின் நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 2:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.