
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, அவர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு விதிக்கப்பட்ட 06 ஆண்டு கால சிறைத்தண்டனையில் மீதமுள்ள காலத்தை அனுபவிப்பதற்காக, அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ராஜகிரிய – நாவல பகுதியிலுள்ள அவரது ஆலயத்துக்குச் சென்றதாக ‘தி சண்டே ஐலண்ட்’ (The Sunday Island) செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், அவர் எங்கு இருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியாது என்று, ஆலயத்திலிருந்த பிக்குகள் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மே 2019-ல் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்பு, ஞானசார தேரர் தனது ஆறு ஆண்டு கால சிறைத்தண்டனையில் சுமார் ஒன்பது மாதங்களை மட்டுமே அனுபவித்திருந்தார். எனவே, இப்போது அவர் தனது தண்டனையின் பெரும்பகுதியை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மைத்திரி வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அந்தப் பொதுமன்னிப்பு தன்னிச்சையானது என்றும், அது பொது நம்பிக்கையையும் இயற்கையான நீதியின் கோட்பாடுகளையும் மீறிய செயல் என்றும் – உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
நீதிமன்ற அவமதிப்புக்காக விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு கால சிறைத்தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்தபோதே, மே 2019-ல் ஞானசார தேரருக்கு – ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.



