தலைப்புச் செய்திகள்

பாடசாலைப் புத்தகங்களை, பழைய பொருட்கள் வாங்குபவருக்கு விற்ற சம்பவம் தொடர்பில், மேலும் இருவருக்கு விளக்கமறியல்

விநியோக நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய 800,000 ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை, சாரதி ஒருவர் பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கடந்த 07ஆம் திகதி கைது செய்யப்பட்ட இருவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளர்.

இந்தப் புத்தகங்கள் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் உள்ள முதலாம் வகுப்பு தமிழ் மொழி மாணவர்களின் மூன்றாம் தவணைப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டவை ஆகும்.

கைது செய்யப்பட்டவர்கள், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான உதவி முகாமையாளரும், பியகமவில் உள்ள ‘தாஷ்மா இன்டர்நேஷனல்’ (Tashma International) நிறுவனத்தின் பொது முகாமையாளரும் ஆவர்.

இச்சம்பவம் தொடர்பாக, குறித்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த சாரதியொருவர் கடந்த மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உற்பத்தி மற்றும் விநியோக ஆணையாளர் என். டபிள்யூ. டி. ஹிரோஷி குணவர்தன, கடந்த மாதம் 12 ஆம் திகதி வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 மையங்களுக்கு 19,892 பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் ஒப்பந்தம் பியகமவைச் சேர்ந்த ‘தாஷ்மா இன்டர்நேஷனல்’ நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

குறித்த புத்தகங்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்றும், இதன் மூலம் குற்றவியல் ரீதியான நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 1,600 கிலோகிராம் எடையுள்ள அந்தப் புத்தகங்களை நிறுவனத்தின் சாரதி விற்று, 47,000 ரூபாயைப் பெற்றுக் கொண்டமை விசாரணையில் தெரியவந்தது.

சந்தேகத்திற்குரிய சாரதி மே 24 ஆம் திகதி அப்பொருட்களைப் பெற்று, தொம்பே பகுதியிலுள்ள தனது வீட்டிற்குக் கொண்டு சென்று, அங்கு வைத்திருந்ததாக, விசாரணையின் போது தெரிவித்துள்ளார். பின்னர் பழைய செய்தித்தாள்கள் மற்றும் உடைந்த பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரிக்கும் லொறி சாரதியிடம் எடையின் அடிப்படையில் அப்பத்தகங்களை ஒப்படைத்து, அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த லொறி சாரதியைக் கண்டுபிடித்து விசாரித்ததில், அவர் அப்புத்தகங்களை அதே நாளில் பேலியகொட பகுதியிலுள்ள பழைய செய்தித்தாள்கள் மற்றும் காகிதங்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தமை தெரியவந்ததாகப் பொலிஸார் கூறியுள்ளனர். அந்த நிறுவனத்தில் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், புத்தகங்கள் கூழாக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து கிரிவத்துடுவ மற்றும் கடவத்தையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். குற்றவியல் ரீதியாகப் பணத்தை அல்லது சொத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது, நம்பிக்கையை மீறியது மற்றும் நிர்வாக நடவடிக்கைகளைச் சரியாகக் கண்காணிக்கத் தவறியதன் மூலம் அரசுச் சொத்துக்கு இழப்பு ஏற்படத் துணை நின்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.