
நேபாளத்தில் பாரிய வெள்ளம் ஏற்பட்டு 09 நாட்கள் கடந்துள்ள நிலையில், நீர்மின் சுரங்கப்பாதை ஒன்றில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் இன்று (04) வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்டுள்ளனர்.
மேலும், உள்ளே சிக்கியிருப்பதாக நம்பப்படும் மற்றவர்களை மீட்பதற்கான பணிகளை அவசரகாலக் குழுக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஓகஸ்ட் 26 அன்று நேபாளத்தில், பனி மலைகள் சரிந்ததால் ஏற்பட்ட வெள்ளம் – நகரங்களைச் சிதைத்து, கிராமங்களை அடித்துச் சென்றது. இந்த அனர்த்தம் நடந்து ஒன்பது நாட்களுக்குப் பிறகு, திரிசூலி 3A சுரங்கப்பாதையில் இருந்து மேற்படி இரு ஆண்களும் மீட்கப்பட்டனர்.
சிக்கியிருந்த முதல் தொழிலாளி மீட்கப்பட்டதை உறுதிப்படுத்திய சிறிது நேரத்திலேயே, நேபாள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ராம் நியூபானே தனது முகநூல் பக்கத்தில் இரண்டாவது மீட்பு நபர் மீட்கப்பட்டமை பற்றி பதிவிட்டார். மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் மெக்கானிக்கல் ஃபோர்மேன் மற்றவர் மெக்கானிக்கல் சூப்பர்வைசர் என அடையாளம் கண்டனர்.
சேறு படிந்த நிலையில் மீட்கப்பட்ட முதல் தொழிலாளி, மீட்பவரின் தோளில் சுமந்து செல்லப்படும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இருவரும் சீரான நிலையில் இருப்பதாகவும், காத்மாண்டுவில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திரிசூலி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் குறைந்தது 557 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் சுமார் 115 பேர் பிரதான சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கலாம் என நேபாளத்தின் சுதந்திர மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 1,259 பேர் உயிரிழந்தனர். 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.



