
சமீபத்தில் காலநிலை அனத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, சுரக்ஷா சிசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் – இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
நொவம்பர் 26 முதல் டிசம்பர் 31, 2025 வரை ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சமர்ப்பித்த கோரிக்கைகள் மீது, விசேட கவனம் செலுத்த இலங்கைக் காப்பறுதிக் கூட்டுத்தாபனம் ஒப்புக்கொண்டுள்ளது.
திருத்தப்பட்ட விதிகளின்படி, குறிப்பிட்ட காலகட்டத்தில் அனர்த்த சம்பவங்கள் தொடர்பான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். அனர்த்தம் காரணமாக மாணவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களை இழந்த சந்தர்ப்பங்களில், இழப்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பித்தால், வழக்கமான வருமான வரம்புகளைப் பயன்படுத்தாமல் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
அசல் ஒப்பந்தத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அனர்த்தத்தினால் ஏற்படும் விபத்துகளின் விளைவாக வைத்திய சிகிச்சை, மருந்துகள் வாங்குதல் மற்றும் பரீட்சைக் கட்டணங்களுக்காக ரூ. 20,000 வரை வெளிப்புற சிகிச்சை சலுகைகளையும் அங்கீகரித்துள்ளது.
நொவம்பர் 1 முதல் நவம்பர் 26, 2025 வரையிலான சம்பவங்கள் தொடர்பான உரிமை ஆவணங்கள் அனர்தத்தினால் அழிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பாடசாலை அதிபர் மற்றும் தொடர்புடைய கிராம நிர்வாக உத்தியோகத்தரின் பரிந்துரைகளின் அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படும்.

தனியார் வைத்தியசாலைகள் வழங்கிய பில்கள் அழிந்து போயிருந்தால், அந்தந்த நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றளிக்கப்பட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு வைத்தியசாலைகள் வழங்கிய அறிக்கைகள் சேதமடைந்திருந்தால், நோயாளி விவரங்கள், அனுமதி மற்றும் வெளியேற்ற திகதிகள் மற்றும் நோயின் தன்மை ஆகியவற்றைக் கொண்ட மருத்துவ பரிந்துரை கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலதிகமாக, அனர்த்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு, நொவம்பர் 1 முதல் டிசம்பர் 31, 2025 வரை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் உரிமைகோரல்கள் அல்லது துணை ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு, தற்போதுள்ள 90 நாள் காலக்கெடுவைத் தாண்டி கூடுதலாக 60 நாட்கள் உட்பட, 150 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்ட சமர்ப்பிப்பு காலம் வழங்கப்படும்.


