
வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் 75 மி.மீ மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடுமையான மழைப்பொழிவாக இல்லாது விட்டாலும், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
வங்காள விரிகுடாவில் மேகங்கள் புயலாக மாறி இலங்கையை நோக்கி நகர்ந்து, தீவிர மழையை ஏற்படுத்தும் என்றும் பிபிசி தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட காணி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அமைச்சர் அரவிந்த செனரத்; வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை – நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களை நிர்வகிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து, பெரும்பாலான முக்கிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கசிவு மட்டத்தில் உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
“மீண்டும் 150-200 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்தால் அது ஆபத்தானது. அதிகப்படியான நீரை வெளியேற்றவும் நிலைமையை நிர்வகிக்கவும் நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


