
– றியாஸ் இஸ்மாயில் –
அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு, புலமைப் பரிசில் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வினை, நேற்று (16) அகில இலங்கை வை.எம்.எம்.ஏ அமைப்பு – பாலமுனை அல்ஹிதாயா மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடத்தியது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ அமைப்பின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் அதிபர் எம்ஐ.எ். றியாஸ் நெறிப்படுத்தலில்,கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் இருந்து வருகை தந்த அகில இலங்கை வை.எம்.எம்.ஏ உபதலைவர் எம்.ஆர்.எம். சியாத், முன்னாள் தலைவர் ஹலீம் ஏ. அஸீஸ், புலமைப் பரிசில் திட்டத்தின் செயலாளர் மஹாரீம் ஏ தாஹா மற்றும் அன்வர் சதாத் ஆகியோர் கலந்து கொண்டு, மேற்படி தேர்வை நடத்தனர்.

இதன் போது முன்னாள் தேசிய தலைவர் ஹலீம் ஏ. அஸீஸ், புலமைப் பரிசில் திட்டத்தின் செயலாளர் மஹாரீம் ஏ தாஹா ஆகியோரின் சமூகப் பணிகளைப் பாராட்டி, அமைப்பின் அம்பாறை மாவட்ட கிளையினர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
இந்தப் புலமைப் பரிசிலுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்த 133 மாணவர்கள்மேற்படி நேர்முகத் தேர்வுக்கு சமுகமளித்தனர். இதில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ ஏற்பாட்டில் 2026 ஜனவரி முதல் 18 மாதங்களுக்கு புலமைப் பரிசில் பணத் தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று முன்னதினம் நடைபெற்றது.
உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவில் கற்கும் மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 06 ஏ சித்திகளையும், கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் கற்கும் மாணவர்கள் 05 ஏ சித்திகளையும் பெற்றிருத்தல் – இந்தப் புலமைப் பரிசிலுக்காக விண்ணப்பிப்பதற்குரிய தகுதியாகும்.





