
மாகாணத் தேர்தல்களை நடத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளைக் கண்டறியும் பொருட்டு, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொடர்புடைய சிவில் சமூக அமைப்புகளின் கூட்டத்தை அரசாங்கம் கூட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு முதல் சட்டப் பிரச்சினை காரணமாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் விகிதாசார ரீதியில் நடத்தப்பட்டு வந்த நிலையில், அதனை கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டத் திருத்தமொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் – இதுவரை அந்தச் சட்டத்துக்கமைவான எல்லை நிர்ணயம் அங்கீகரிக்கப்படவில்லை.
அதனாலேயே, அனைத்துக் கட்சிகள் மட்டும் சிவில் சமூகங்களின் கூட்டத்தை நடத்தவுள்ளதாக – பொது நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறையைத் தொடர்ந்து, அப்போதைய மாகாண சபைகள் அமைச்சர் சமர்ப்பித்த எல்லை நிர்ணய அறிக்கையை – நாடாளுமன்றம் நிராகரித்தது. மேலும், அமைச்சரே தான் சமர்ப்பித்த அறிக்கைக்கு எதிராக வாக்களித்தார்.
எல்லை நிர்ணய நோக்கத்திற்காக சபாநாயகர் நியமித்த மற்றும் பிரதமர் தலைமையிலான ஒரு மறுஆய்வுக் குழு, நிராகரிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட்டால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தேர்தல்களை நடத்த முடியும் என்று அறிக்கை கூறுகிறது.
இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட இரண்டு மாத காலத்திற்குள் ஜனாதிபதிக்கு மறுஆய்வுக் குழுவின் அறிக்கை கிடைக்காததால், மாகாண சபைத் தேர்தல்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாத சட்டப்பூர்வ தடையை சந்தித்தன.

புதிய சட்டம் முழுமையடையாத நிலையில், முந்தைய சட்டம் காலாவதியாகிவிட்டதால், மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக தற்போது பொருந்தக்கூடிய சட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகள் இல்லாததால், தொடர்புடைய மாகாண ஆளுநர்களால் செயல்படுத்தப்படுகின்றன.


