தலைப்புச் செய்திகள்

உயிராபத்தை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகள்: ‘அசட்டு விளம்பரம்’ தேடும் அட்டாளைச்சேனை பிரதேச சபை அரசியல்வாதிகள், இதிலும் கவனம் செலுத்துங்கள்

– அஹமட் –

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் உலவுகின்றமையினால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதோடு, பொதுமக்களும் கடுமையான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றின் பிரதான நுழைவு வாயிலில், மாடுகள் தொடர்ச்சியாக ஒன்று கூடுகின்றமையினால், அங்குள்ளவர்கள் பெரும் பிச்சினைகைளை தினமும் எதிர்கொள்கின்றனர்.

பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பொதுமக்களும் ஊடகங்களும் தொடர்ச்சியாக கூறி வருகின்ற போதிலும், பிரதேச சபை – அலட்சியமாகவே இருந்து வருகின்றது.

தற்போது புதிய தவிசாளரும் உறுப்பினர்களும் தெரிவாகியுள்ள நிலையிலும் கட்டாக்காலி மாடுகளின் பிரச்சினைகள் தீர்ந்ததாக இல்லை.

கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தால், அதன் உரிமையாளர்களை பகைக்க நேரிடலாம் என்றும், அவ்வாறு நடப்பது தமது அரசியலுக்கு தீமையாக அமைந்துவிடும் என்பதாலுமே – தவிசாளர், இந்த மாட்டு விவகாரத்தில் கண்டும் காணாமல் இருந்து வருகின்றாரா என்கிற கேள்விகளும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

தெரு விளக்குகள் பொருத்தப்படும் இடங்களில் நின்று படம் எடுத்து அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, ‘அசட்டு விளம்பரம்’ தேடும் பிரதேச சபை அரசியல்வாதிகள், பொதுமக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகள் விவகாரத்திலும் கவனம் செலுத்த வேண்டுமென – பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.