தலைப்புச் செய்திகள்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸுக்கான வெகுமதி; இதில் டரம்ப்புக்கு உடன்பாடில்லை: வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்

பலஸ்தீனத்தை – மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்து வரும் நடவடிக்கையானது ‘ஹமாஸுக்கான வெகுமதி’ என்று – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருதுகிறார் என, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்; இந்த முடிவுக்கு ட்ரம்ப் உடன்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

“மேற்கத்திய நாடுகளின் இந்த முடிவுகள் – காஸாவில் தற்போது முதன்மை இலக்காக இருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு எதையும் செய்யாது என்று ட்ரம்ப் நினைக்கிறார். மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தத் தீர்மானங்கள் எதுவும் செய்யாது என்றும்” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; “வெளிப்படையாகச் சொன்னால், இது ஹமாஸுக்கு ஒரு வெகுமதி என்று அவர் நம்புகிறார். இந்த முடிவுகள் வெறும் பேச்சுக்கள் என்றும் தனது நண்பர்களின் போதுமான நடவடிக்கை அல்ல என்றும் அவர் நம்புகிறார்” என்றார்.

பிரிட்டன், கனடா, அவுஸ்ரேலியா மற்றும் போர்சுகல் ஆகிய நாடுகள் நேற்றைய தினம் பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்திருந்த நிலையில் – பிரான்ஸ், அன்டோரா, பெல்ஜியம், லக்சம்பர்க், மோல்டா மற்றும் மொனாக்கோ ஆகிய நாடுகளும் பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.