
பலஸ்தீன் எனும் நாடு இருக்காது என்று, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரு குடியேற்ற விரிவாக்கத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேற்குக் கரையை இரண்டாகப் பிரிக்கும் இந்தத் திட்டத்தைத் தொடர பெஞ்சமின் நெதன்யாகு – நேற்று வியாழக்கிழமை (11) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
“பலஸ்தீன நாடு இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றப் போகிறோம். இந்த இடம் எங்களுக்குச் சொந்தமானது” என்று – ஜெருசலேமுக்கு கிழக்கே உள்ள இஸ்ரேலிய குடியேற்றமான – மாலே அடுமிமில் நடந்த நிகழ்வில் நெதன்யாகு கூறினார்.

மேலும், “நகரத்தின் மக்கள்தொகையை இரட்டிப்பாக்கப் போகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய குடியேறிகளுக்கான 3,400 புதிய வீடுகளை உள்ளடக்கிய இந்த மேம்பாட்டுத் திட்டம், மேற்குக் கரையின் பெரும்பகுதியை – ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமிலிருந்து துண்டித்து, அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய குடியேற்றங்களை இணைக்கவுள்ளது.
எதிர்கால பலஸ்தீன நாட்டின் தலைநகராக – கிழக்கு ஜெருசலேமை பலஸ்தீனியர்கள் தேர்ந்தெடுத்துள்ளமையினால், அவர்களுக்கு அந்தப் பிராந்தியம் மிகவும் முக்கியமானது.
1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அனைத்து இஸ்ரேலிய குடியேற்றங்களும், இஸ்ரேலிய திட்டமிடல் அனுமதியைப் பெற்றுள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகக் கருதப்படுகின்றன.



