தலைப்புச் செய்திகள்

42 ஆயிரம் ஆசிரியர் பற்றாக்குறையை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும்: பிரதமர்

தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடத்தை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, அடுத்த 06 மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைகளை அறிமுகப்படுத்தி, ஏற்கனவே உள்ள வளங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் – கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் கல்வி மாற்றத்தை மேற்பார்வையிட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் (தரம் 6–13) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பிரதமர் ஹரினி அமரசூரிய இந்தக் விடயங்களைக் கூறினார்.

கல்வித் துறையில் டிஜிட்டல் மாற்றத்தைத் தொடங்குதல், தொடர்புடைய சவால்களை எதிர்கொள்வது மற்றும் தேவையான கொள்கைகளை செயல்படுத்துவது குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் போது பிரதமர் மேலும் கூறுகையில்,

“தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் தற்போது நிலவும் 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும்.

இந்தப் பணிக்குழுவின் முதன்மை நோக்கங்களின் கீழ், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினர் உட்பட அனைத்துப் பாடசாலைளுக்கும் வசதிகளை சமமாகப் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்வதும் அடங்கும். இந்த இலக்கை அடைவதற்கு வலுவான, பல துறைகளைக் கொண்ட பணிக்குழு அவசியம்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.