தலைப்புச் செய்திகள்

வாகன இறக்குமதி மூலம் 165 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியதாக, சுங்கத் திணைக்களம் தெரிவிப்பு

வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இதுவரை வாகன இறக்குமதி மூலம் மட்டும் சுமார் 165 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத்துறை அறிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சுங்கத் திணைக்கள மேலதிகப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட; 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கை சுங்கத் திணைக்களம் தாண்டிச் செல்வதாக கூறினார்.

“2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை சுங்கத்துறைக்கு ஒதுக்கப்பட்ட வருவாய் இலக்கு 2,115 பில்லியன் ரூபாய். 2024 ஆம் ஆண்டில், எங்கள் இலக்கு 1,533 பில்லியன் ரூபாயாக இருந்தது. அதை நாங்கள்1,535 பில்லியன் ரூபாயாக ஈட்டுவதன் மூலம் தாண்டிவிட்டோம். இந்த ஆண்டு ஜூன் நடுப்பகுதியில், நாங்கள் ஏற்கனவே 900 பில்லியன் ரூபாய் வருவாயைப் பெற்றுள்ளோம்” எனவும் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 1, 2025 முதல் – வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்தது. அப்போதிருந்து, சுமார் 14,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது சுங்க வருவாய்க்கு சுமார்165 பில்லியன் ரூபாயை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வாகன இறக்குமதி மூலம் 450 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஈரான்-இஸ்ரேல் மோதலின் விளைவாக இலங்கைக்கு பொருட்கள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அருக்கொட, இதுவரை கப்பல் போக்குவரத்து தாமதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.