
தென்னாபிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் இந்திய மதிப்பில் 3.22 கோடி பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில், மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, தென்னாபிரிக்காவின் டேர்பன் நீதிமன்றம் 07 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆயினும் அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின் (வயது 56) அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், செயற்பாட்டு பணிப்பாளராகவும் உள்ளார்.
இவர் தென்னாபிரிக்காவில் உள்ள ‘நியூ ஆப்ரிக்கா அலையன்ஸ்’ என்ற காலணி விநியோக நிறுவனத்தின் பணிப்பாளர் மகாராஜ் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். மேற்படி மகாராஜ் என்பவரின் நிறுவனம் – ஆடைகள் மற்றும் காலணிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. மேலும் இதர நிறுவனங்களுக்கும் கடன் வழங்குகிறது.
மகாராஜிடம் ஆசிஷ் லதா, தனக்கு தென்னாபிரிக்க பணத்தில் 06 மில்லியன் ரேண்ட் (இந்திய மதிப்பில் 3.22 கோடி) பணம் கடன் பெற்றுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல நெட்கேர் குழும வைத்தியசாலைகளுக்கு துணிகள் விநியோகிக்க, இந்தியாவில் இருந்து 03 கன்டெய்னர்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், அதற்கு வரி செலுத்த பணம் தேவைப்படுவதாகவும் கூறியே அவர் கன் பெற்றுள்ளார். இதற்கு சான்றாக போலி ரசீதுகளையும் காட்டியுள்ளார்.
ஆசிஷ் லதா – மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால், அவரை நம்பி மகாராஜ் 06 மில்லியன் ரேண்ட் பணத்தை கடனாக வழங்கியுள்ளார்.
ஆனால் ஆசிஷ் லதா வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வில்லை. அவர் கொடுத்த ஆவணங்களும் போலி எனத் தெரிய வந்தது. இதனால் ஆசிஷ் லதா மோசடி செய்ததாக மகாராஜ் முறைப்பாடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த டர்பன் நீதிமன்றம் ஆசிஷ் லதாவுக்கு 07 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவர் தற்போது 50,000 ரேண்ட் பிணைத் தொகை செலுத்தி பிணையில் வெளிவந்துள்ளார்.
மகாத்மா காந்தியின் வாரிசுகள் பலர் – மனித உரிமை ஆர்வலர்களாக பணியாற்றுகின்றனர். அவர்களில் ஆசிஷ் லதா ராம்கோபின்னும் ஒருவர். இவரின் தாய் எலா காந்தி, தென்னாபிரிக்காவில் பிரபலமானவர். இவரின் பணிகளை பாராட்டி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அரசுகள் விருதுகள் வழங்கியுள்ளன.



