
ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை விசாரிக்கும் குழுவில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை nபாலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமித்துள்ளார். அதனால், குறித்த குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை நான்கிலிருந்து ஐந்தாக உயர்த்தியுள்ளது என்று, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2019 ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய நேற்று செவ்வாய்க்கிழமை (22) நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நேரடி அறிவுறுத்தலின் கீழ், ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் ஏப்ரல் 20ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) சமர்ப்பிக்கப்பட்டன.
அதன்படி, விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்கு – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.
அந்தக் குழுவின் உறுப்பினர்களாக, குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் மற்றும் பயங்கரவாதப் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்பான செய்தி: ஈஸ்டர் தின தாக்குதல்; ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்து விசாரணை நடத்த குழு நியமனம்



