தலைப்புச் செய்திகள்

லசந்த கொலை வழக்கு சந்தேக நபர்களை விடுவிக்கும் தீர்மானம்: சட்ட மா அதிபர் வாபஸ்

டகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்களை, அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக மீளப்பெறுவதாக கல்கிசை நீதவான் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் அந்த வழக்கிலிருந்து முழுவதுமா விடுவிக்க முடியுமென்று, கல்கிஸை நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்ட மா அதிபர் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.


ராணுவத்திலுள்ள சாஜன்ட் பிரேம் ஆனந்த உதலாகம, உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸசிறி சுகத பால, பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோரை, குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சட்ட மா அதிபர் பரிந்துரை வழங்கியிருந்தார்.

போதுமான ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை என்ற அடிப்படையில் மூன்று சந்தேகநபர்களையும் வழக்கிலிருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த விடயம் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளானது. மேலும் அரசாங்கத்துக்கு எதிராகவும் இந்த விடயத்தை வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 08ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சட்டமா அதிபருக்கும் இடையில் ரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதில் நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவும் கலந்து கொண்டார்.

இந்தப் பின்னணியிலேயே, குறித்த சந்தேக நபர்கள் தொடர்பாக சட்டமா அதிபர் அண்மையில் வழங்கிய பரிந்துரைகளை தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக இன்று (13) சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.