
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (31) நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி, கொழும்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவருக்கு பாதுகாப்பாக வந்த மேற்படி வாகனம் இன்று (01) அதிகாலை 1 மணியளவில் தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குப் பிறகு, காயமடைந்தவர்கள் முதலில் அவர்களுடன் வந்த மற்றொரு வாகனத்தில் தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மோசமாக இருந்ததால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டதாக அனுராதபுரம் வைத்தியசாலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தில் தொடர்புடைய சாரதி ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிபவர் என்பதும், காயமடைந்த மற்றவர்கள் இலங்கை பொலிஸாருடன் இணைக்கப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் குறித்து தலாவ போலீசார் மேலும் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
இதையும் பாருங்கள்



