தலைப்புச் செய்திகள்

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் பிரதமர் தகவல்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பரீட்சை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக – விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், முடிவுகளை வெளியிட முடியவில்லை என்று பிரதமர் இதன்போது கூறினார்.

இருப்பினும், நீதிமன்ற வழக்கு சமீபத்தில் முடிவடைந்து, அதன் பின்னர் விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக பிரதமர் அமரசூரிய குறிப்பிட்டார்.

விடைத்தாள் திருத்தும் செயல்முறையை விரைவுபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்த அவர், 2024 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை, வினாத் தாளில் இடம்பெற்றிருந்த கேள்விகளை ஒத்த ஒரு போலி வினாத்தாள் பகிரப்பட்டதை அடுத்து பிரச்சினை தொடங்கியது.

புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் உள்ள சில கேள்விகளைப் போன்ற கேள்விகளைக் கொண்ட ஒரு பயிற்சி வினாத்தாள், தேர்வுக்கு முன்னதாக அலவ்வ பகுதியில் உள்ள ஒரு கல்வி ஆசிரியரால் பரப்பப்பட்டது.

அந்த நேரத்தில், பல்வேறு தரப்பினரால் அளிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, தேர்வுத் துறை இந்த விவகாரம் குறித்து பரீட்சைத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியது.

பின்னர் பரீட்சைத் திணைக்கள அதிகாரியினால் முறையிடப்பட்டமையை அடுத்து, குற்றப் புலனாய்வுத் துறையும் விசாரணை நடத்தியது.

அதன் பிறகு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் இருந்து கேள்விகள் கசிந்ததாகக் கூறப்படும் வழக்கில் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.