
– பாறுக் ஷிஹான் –
பொலிஸ் நிலையத்தில் வைத்து – இரு சாராரிடையே நடத்த பிரச்சினையை விசாரித்து் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை, குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்தனர்.
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் – இரு சாராரிடையே நடந்த சண்டை தொடர்பில் நேற்ற வெள்ளிக்கிழமை (27) பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீதே – இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரியநீலாவணை பொலிஸ் நிலைய – பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவில் கடந்த வியாழக்கிழமை (26) நபரொருவர் முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தார். இதன் அடிப்படையில் அம்முறைப்பாட்டை ஆராய்வதற்காக, இரு தரப்பினரையும் வரவழைத்த பொலிஸ் அதிகாரி, நடந்த விடயங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
அப்போது முறைப்பாட்டாளர் பக்கமாக நின்ற பெண் – திடீரென தனது செருப்பினை கழற்றி மறுமுனையில் இருந்த எதிராளியை நோக்கி பல முறை தாக்கியுள்ளார்.
இதன் போது உடனடியாக செயற்பட்ட அப்பொலிஸ் அதிகாரி – குறித்த தாக்குதலை நிறுத்துமாறு கோரி சமரசப்படுத்த முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரியை திடிரென குழுவாக இணைந்து பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்கள் தாக்கியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத குறித்த பொலிஸ் அதிகாரி – காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருதமுனை பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எனும் அடிப்படையில் ஆண்களும் பெண்களும் 07 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடமைக்கு இடையூறு செய்தமை, சமாதானத்திற்கு குந்தகம் விளைவித்தமை, வன்முறையை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் – எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்ய, பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பூரண விசாரணைகளை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.டி.எம்.எல். புத்திக மேற்கொண்டுள்ளார்.



