தலைப்புச் செய்திகள்

07 கிலோ ஹெரோயின் 01 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் ஆகியவற்றுடன் ‘ஹரக் கட்டா’வின் ஆட்களும் கைது

‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக விக்கிரமரத்னவின் போதைப்பொருள் நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்குப் பொறுப்பான ‘ஆர்மி சூட்டி’ எனப்படும் பாதாள உலக பிரமுகரின் இரண்டு கூட்டாளிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 7.4 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1.17 கிலோகிராம் ‘ஐஸ்’ எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டனர். இதன் பெறுமதி 285 மில்லியன் ரூபாயாகும் என, அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் – பிலியந்தலையில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், போதைப் பொருளுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனையின் போது,கைது செய்யப்பட்டவர்கள் 41 வயதான ஓமல்பேஜ் தம்மிக்க சமன் குமார மற்றும் 53 வயதான கங்கணம் ஆராச்சிகே சுஜீவ ஆகியோராவார்.

சந்தேகநபர்களிடம் ஹெரோயின் போதைப்பொருளுக்கு மேலதிகமாக – மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.