
– மரைக்கார் –
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று (26) நடைபெற்றபோது, அங்கு கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்ற நிலையில், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கூட்டத்தைப் புறக்கணித்து இடைநடுவில் வெளியேறியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இன்று (26) பிற்பகல் – கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில், அந்தக் கட்சியின் உயர் பீடக் கூட்டம் ஆரம்பித்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம்; கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஏ.எல். தவம் – கடந்த 02 வருடங்களாக, தான் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி மிகவும் மோசமாக பேசியும், எழுதியும் வருவதாகவும், அதனை கட்சித் தலைவர் ஹக்கீம் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
”தலைவரே, கட்சியின் உச்சபீடக் கூட்டம் நடந்தபோது அதனைப் படமெடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டமைக்காக, உயர்பீட உறுப்பினர் யஹ்யாகானை – இரண்டு உயர்பீடக் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என தடை விதித்தீர்கள். ஆனால், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்ந்தும் அவமதிக்கும் வகையில் எழுதி வரும் தவத்துக்கு எதிராக என்ன செய்தீர்கள்” என, ரஊப் ஹக்கீமை நோக்கி இதன்போது பைசல் காசிம் கேள்வியெழுப்பினார்.
”தவத்தை நீங்கள்தான் வளர்க்கிறீர்கள். அது மிக நன்றாகத் தெரிகிறது. கட்சியைப் பற்றி உங்களுக்கு கவலையில்லை, உங்கள் திட்டங்களின் பின்னால் எல்லோரும் ஓட வேண்டும் என நினைக்கிறீர்கள். தவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத வரையில் நான் இனி வரப் போவதில்லை” எனக் கூறி விட்டு, உயர்பீடக் கூட்டத்தைப் புறக்கணித்து இடைநடுவில் பைசல் காசிம் வெளியேறினார்.
இந்தக் கூட்டத்தில் மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஏ.எல். தவம் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: ஹரீஸ், பைசலுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கக் கூடாது; அவர்கள் முன்பாக, ஹக்கீமிடம் தவம் வலியுறுத்தல்



