
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்புக்கு (கஃபே) இதுவரை 435 முறைபாடுகள் கிடைத்துள்ளன.
இம்முறைபாடுகளில் அதிகளவானவை – சட்ட விரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலே பதிவாகி உள்ளன என கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவுறுத்தல் விடுக்கபட்ட தினத்திலிருந்து வேட்புமனு தாக்கல் செய்கின்ற தினம் வரைக்கும் பதிவாகியுள்ள முறைபாடுகளில் அதிகளவானவை, அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பிலே பதிவாகி இருந்தன.
ஆனாலும் வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னரிலிருந்து இதுவரையான காலப்பகுதிகுள் கஃபே அமைப்புக்கு கிடைத்துள்ள முறைபாடுகளில் அதிகளவிலானவை, தேர்தல் சட்ட விதிமுறை மீறல் தொடர்பாகவே பதிவாகி உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கஃபே அமைப்பு, 25 மாவட்டகளிலும் 25 மாவட்ட இணைப்பாளர்கள் அதேப்போன்று,160 நீண்டகால கண்காணிப்பாளர்களை நியமித்து – தேர்தலுக்கு முன்னரான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருகின்றது.
அதேபோன்று தேர்தல் பிரச்சார நிதியினை கண்காணிப்பதற்காக 40 தேர்தல் தொகுதிகளில் 40 நீண்டகால கண்காணிப்பாளர்களை நியமித்து, தேர்தல் பிரச்சாரத்துக்காக – ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அமைச்சர்களும் செலவு செய்கின்ற செலவு தொடர்பிலான கண்காணிப்பினை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கு மேலதிகமாக எதிர்வரும் செப்ரெம்பர் 21ம் திகதி தேர்தல் தினத்தில் – தேர்தல் தின கண்காணிப்பாளர்களாக நாடளாவிய ரீதியில் 3500 தேர்தல் தின கண்காணிப்பாளர்களை நியமித்து, அதன் ஊடாக தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கஃபே அமைப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் மேலும் தெரிவித்துள்ளார்.



