தலைப்புச் செய்திகள்

தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தில் எந்தவித சிக்கலும் இல்லை; வர முடியாது என்பதை மாவை அறிவித்தார்: சி.வி.கே. சிவஞானம் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழரசுக்கட்சி எடுத்த தீர்மானத்தில் எந்த சிக்கலும் இல்லை என அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி. வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (02) வவுனியாவில் இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்றும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழரசுக் கட்சி உறுப்பினர் அரியநேத்திரனை போட்டியிலிருந்து விலகுமாறு கோருவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. 

ஆனாலும், கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த இந்தத் தீர்மானம் குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், தீர்மானம் குறித்து தனக்கு தெரியாது என்றும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

இது தொடர்பாக நேற்றைய மத்தியக் குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஊடகத்துக்கு கூறுகையில், மத்தியகுழு கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்பதை மாவை சேனாதிராஜா முன்கூட்டியே அறிவித்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கட்சியின் யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு கூட்டத்துக்குத் தேவையான கோரம் இருந்ததாகவும், எனவே இந்தத் தீர்மானத்தில் எந்த சிக்கலும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தீர்மானம் ஒன்றை எடுக்கத் தமிழரசுக் கட்சியின் யாப்பின் படி மத்திய செயற்குழு கூட்டத்தில் குறைந்தபட்சம் 11 பேர் இருக்க வேண்டும் என்றும், நேற்றைய கூட்டத்தில் 26 பேர் இருந்ததாகவும் சிவஞானம் சுட்டிக்காட்டினார்.

தொடர்பான செய்தி: ”சஜித்துக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் தொடர்பில் எனக்குத் தெரியாது”: தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை