கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர்கள் முறையற்ற ரீதியில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

🕔 January 23, 2023

– அஹமட் –

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் – முறையற்ற ரீதியில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. மௌலானா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தென்கிழக்கு கரையோர பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர் ஒருவர், கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினுடைய பணிப்பாளர் சபையில் நியமிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு, அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அண்மையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, சங்கத்தின் தலைவர் மௌலானா இவ்விடயங்களைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உயரதிகாரிகள் மேற்கொள்ளும் மோசடிகளை மறைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் தயாரில்லை.

அங்கு மேற்கொள்ளப்படும் ஊழல்களையும் மோசடிகளையும் ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டோருக்குத் தெரியப்படுத்தவும் நாம் தயாராக உள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் நடைபெறும் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு தாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாரில்லை என இதன்போது உறுதிபடத் தெரிவித்த மௌலானா; “எமது சங்கத்தினரின் இந்த நிலைப்பாடு காரணமாக, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளால், எங்களின் சங்க உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்” எனவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்