அட்டாளைச்சேனை பிரதேச செயலக பணியாளர்களிடம், ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்துக்காக பெருந்தொகை பணம் கோரப்படுவதாக புகார்

🕔 December 14, 2022

– அஹமட் –

ரு லட்டசம் பேருக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழில் பெற்று – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பணியாளர்களிடம், ஆண்டு இறுதி நிகழ்வினை கொண்டாடுவதற்கெனத் தெரிவித்து, பெருந்தொகைப் பணம் கோரப்பட்டுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரியவருகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மேற்படி பணியாளர்கள் 76 பேர் இணைப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஒவ்வொருவரிடமும் 1500 ரூபா வீதம் பணம் கோரப்பட்டுள்ளது.

மேற்படி பணியாளர்களுக்கு பொறுப்பாகவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரே – இவ்வாறு பணம் வழங்குமாறு வற்புறுத்தி வருகின்றார்.

ஒரு லட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழில்வாய்ப்புப் பெற்றுள்ளவர்கள் மாதாந்தம் 22,500 ரூபாவை சம்பளமாகப் பெறுகின்றனர். இவ்வாறான நிலையில், அவர்கள் ஒவ்வொருவரிடமும் 1500 ரூபா பணம் வழங்குமாறு வற்புறுத்துவது மனச்சாட்சியற்ற செயல் என, இவ்விடயம் தொடர்பில் ‘புதிது’ செய்தித்தளத்திடம் பேசிய பணியாளர்கள் கூறினர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, சாதாரணமான சம்பளம் பெறும் அரச உத்தியோகத்தர்களே பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், குறைவான சம்பளம் கிடைக்கும் மேற்படி பணியாளர்களிடம், அவர்களின் சம்பளத்தில் கணிசமானதொரு பகுதியை இலவசமாக வழங்குமாறு கோருவதை – ஏற்க முடியாது எனவும், குறித்த பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடு பொருளாதார நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரச பணியாளர்களிடம் பெருந்தொகைப் பணத்தை வற்புறுத்திப் பெற்று, பிரதேச செயலகமொன்று ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்தை நடத்த வேண்டுமா? எனவும் இங்கு கேள்வியெழுப்பப்படுகிறது.

ஒரு லட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தொழில் பெற்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இணைப்புச் செய்யப்பட்டுள்ள மேற்படி பணியாளர்களுக்கு பொறுப்பாகவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் – இவ்வாறான பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை குறித்தும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இவ்விடயம் தொடர்பிலான குரல் பதிவுகள் ‘புதிது’ செய்தித்தளத்திடம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்