இந்தியா வழங்கிய நன்கொடைப் பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு

🕔 December 6, 2022

ந்தியாவில் இருந்து நன்கொடையாகக் கிடைத்த உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உள்நாட்டில் விநியோகிப்பதற்காக, உணவு ஆணையாளர் திணைக்களம் கிட்டத்தட்ட 200 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதாக, ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஒரு கிலோகிராம் அரிசியை கொண்டு செல்வதற்கு விதிக்கப்படும் நியம விலையை விடவும், ஐந்து அல்லது ஆறு ரூபா கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் முடித் பெரேரா கூறியுள்ளார்.

அந்த வகையில் இதுவரை கொண்டு செல்லப்பட்ட அரிசிக்காக 180 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் இரண்டு முறை இந்தியாவிலிருந்து பெறப்பட்ட 40,000 மெட்ரிக் டொன் அரிசி, 450 மெட்ரிக் டொன் பால் மா மற்றும் 4.6 மெட்ரிக் டொன் மருந்துகளை விநியோகிக்க ஜூன் 15 ஆம் திகதி விலைமனுக் கோரப்பட்டது.

ஒப்பந்ததாரர்களாக மூன்று நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அவற்றில் ஒரு நிறுவனம் – கிலோமீட்டருக்கு ஒரு டொன் எடையுடைய பொருளைக் கொண்டு செல்ல 50 ரூபா கேட்டதால் அந்நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது. ஒரு டொன்னுக்கு 35 ரூபா மட்டுமே கோரிய மீதி இரு நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டன.

அந்த இரண்டு நிறுவனங்களும் போக்குவரத்து நிறுவனங்கள் அல்ல என்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் என்றும் பெரேரா கூறியுள்ளார்.

ஒரு அரிசி ஆலையில் 20 டொன்களை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு லொறி மட்டுமே உள்ளது. மற்றைய அரிசி ஆலையில் 10 டன்னுக்கும் குறைவான எடையை ஏற்றக் கூடிய லொரிகள் மட்டுமே உள்ளன.

சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் லொறிகளை வைத்திருக்கும் அதே வேளையில், தரமான தேவைகளைப் புறக்கணித்து, இரு நிறுவனங்களுக்கும் ஏற்கனவே இருந்த விலையை விட இரு மடங்கு விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இருந்து அம்பாறை, பொலன்னறுவை மற்றும் ஏனைய பகுதிகளுக்கு ஒரு கிலோ அரிசியை கொண்டு செல்வதற்கு 20 டொன் ஏற்றக் கூடிய லொறி – ஒரு கிலோமீற்றருக்கு 5 முதல் 7 ரூபா வரை கட்டணம் அறவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும் அம்பாறைக்கு நன்கொடை அரிசியை ஏற்றிச் சென்ற லொறிக்கு உணவு ஆணையாளர் திணைக்களம் கிட்டத்தட்ட ரூபா 240,000 ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்