இரட்டை பிரஜா உரிமையுள்ள எம்.பிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு RTI மூலம் கோரிக்கை: பப்ரல் அமைப்பும் களத்தில்

🕔 October 31, 2022

நாடாளுமன்றிலுள்ள 225 உறுப்பினர்களின் குடியுரிமை நிலை தொடர்பான விவரங்களை வழங்குவதற்கு குடிவரவு – குடியகர்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகததின் அனுமதிக்காக அந்தத் திணைக்களம் காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்துக்கு கிடைத்துள்ள இரண்டு தகவல் அறியும் உரிமை தொடர்பான (RTI) விண்ணப்ப கோரிக்கைகளுக்கு இந்த தகவல் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியுமி பண்டார நேற்று (30) கூறுகையில்;

“தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட இரண்டு தனிப்பட்ட கோரிக்கைகளை அடுத்து, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமை குறித்த விவரங்களை வழங்குவதற்கு கட்டுப்பாட்டு நாயகத்தின் அனுமதிக்காக திணைக்களம் காத்திருக்கிறது” என்றார்.

“தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எங்களுக்கு இரண்டு தனிப்பட்ட கோரிக்கைகள் வந்திருந்தாலும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமை விவரங்களை வழங்குவதற்கு எங்கள் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் இருந்து பரிந்துரையைப் பெற வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களின் பெயர்களை கண்டறிய முடியும் என்றும் பியுமி பண்டார குறிப்பிட்டுள்ளார்.

“எங்கள் திணைக்களத்தின் கட்டமைப்பு மூலம் நாடாளுமன்றில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை வெளிப்படுத்த முடியும். இது ஒரு சிறப்பு விசாரணை அல்ல. அவர்களின் பிறந்த தேதிகள் மற்றும் தேசிய அடையாள அட்டை எண்கள் மூலம், தொடர்புடைய விவரங்களைக் கண்டறிய முடியும். ஆனால் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அதனை மேற்கொள்ளலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

பப்ரல் களத்தில்

இதேவேளை, இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு தமது அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாகவும், குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்துக்கு தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (பப்ரல்) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கடந்த வாரம் கூறியிருந்தார்.

இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் எம்.பி.க்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன், அவர்கள் ராஜினாமா செய்வதாக விளம்பரப்படுத்தப்படும் என்றும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“நாங்கள் அனுப்பியுள்ள தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையில் 225 எம்.பிகளின் பெயர்களையும் சேர்த்துள்ளோம். இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்களின் விவரங்களைக் கோரியுள்ளோம். எங்களுக்குத் தகவல் கிடைத்தும் அதை விளம்பரப்படுத்துவோம். அப்போது இரட்டைக் குடியுரிமை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன். இந்த முடிவை எடுக்கத் தவறினால், நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும். சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி.க்களாக இருப்பதை தடுக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்