போதைப் பொருள் பாவனையில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் திட்டங்களை முன்னெடுத்த போது, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம்: அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

🕔 September 9, 2022

– அஹமட் –

மாணவர்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்கும் வேலைத் திட்டங்களை தாம் முன்னெடுத்த போது, சில அச்சுறுத்தல்கள் தாங்கள் எதிர்கொண்டதாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எம். றஹ்மதுல்லா தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

“இவ்வாறு எமக்கு அச்சுறுத்தல் வந்தபோது, இந்தப் பணிக்காக எமது உயிரையும் அர்ப்பணிப்போம், தயங்க மாட்டோம் என்று நான் கூறினேன்” என அவர் குறிப்பிட்டார்.

“மாணவர்கள் மத்தியில் போதைப் பொருளைப் புகுத்தி, எதிர்கால சமுதாயத்தை சீரழிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு சில முகவர்களும் தொழிற்படுகின்றனர்.

அதிலிருந்து எமது சமுதாயத்தைப் பாதுகாக்காமல் நாம் இருந்து விட முடியாது.

மாணவர்களின் ஒவ்வொரு விடயங்களிலும் நாம் அக்கறை எடுக்க வேண்டும்” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை இவ்வாறான தடைகளையெல்லாம் தாண்டி, அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இம்முறை உயர் தரப் பரீட்சை எழுதியவர்களில் 20 பேர் மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

“அம்பாறை மாவட்டத்திலுள்ள 07 கல்வி வலயங்களில் இருந்தும் மருத்துவத் துறைக்குத் தெரிவான மாணவர்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர் -அக்கரைப்பற்று வலயத்திலிருந்து தெரிவாகியுள்ளனர்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தில் கற்று – இம்முறை மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ள எம்.எல். பாத்திமா ஜீனாவை பாராட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, வலயக் கல்விப் பணிப்பாளர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், கடந்த முறை ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அறபா வித்தியாலய மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்