அடிப்படை உரிமை மீறல் மனு: கோட்டாவை தனிப்பட்ட ரீதியில் பிரதிவாதியாகப் பெயரிட உச்ச நீதிமன்றம் அனுமதி

🕔 September 9, 2022

திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணை ஒப்பந்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தனிப்பட்ட ரீதியில் பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று (09) அனுமதி வழங்கியுள்ளது.

சீனக்குடா எண்ணெய் தாங்கி பண்ணையை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக லங்கா ஐஓசி உடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அதிகாரம் வழங்கிய அமைச்சரவை பத்திரத்தின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தி, எல்லே குணவன்ச தேரர், பெங்கமுவே நாலக தேரர் மற்றும் தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வகுமுல்லே உதித தேரர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தர்ஷன வெரதுவகே, மனுக்களின் தலைப்பை திருத்த நீதிமன்றத்தின் அனுமதியை கோரினார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை வகிக்காத காரணத்தினால் அவரை தனிப்பட்ட முறையில் பிரதிவாதியாக சேர்க்க நீதிமன்றில் அனுமதி கோரினார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய அமைச்சரவையை புதிய முன்னேற்றங்களுக்கு ஏற்ப பதில் தரப்புகளாக மனுக்களில் இணைப்பதற்கு சட்டத்தரணி வெரதுவகே நீதிமன்றத்தின் அனுமதியை மேலும் கோரினார்.

நீதிபதிகள் புவனேகா அலுவிஹாரே மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுக்களின் தலைப்பை திருத்துவதற்கு அனுமதி வழங்கியதுடன், தேவைப்பட்டால் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த மனுக்கள் நொவம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

முதலில்சட்டமா அதிபர் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பெயரிட்டும், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ட்ரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல் (பிரைவேட்) லிமிடெட், லங்கா ஐஓசி பிஎல்சி மற்றும் பலரை பிரதிவாதிகள் பெயரிட்டு மனுதாரர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்