
ஹெரோயினை விட ஐஸ் என்ற போதைப்பொருள் நாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (07) உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
இந்த நிலையில் இந்த ஐஸ் போதைப்பொருள் அதிகளவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை ஆபத்தான விடயம் என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.
“இந்த போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள் ஒரு வருடத்துக்குள் சுவாசம் சார்ந்த மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் நிலைக்கு உள்ளாகிறார்கள்”.
அத்துடன் இந்த போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள், திருட்டு, மற்றும் வழிப்பறிப்பு கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு மக்களுக்கு பாதிப்புக்களையும் ஏற்படுத்தி வருவதாகவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டார்.
“கொழும்பில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, 3700 குடும்பங்களில் 1000 குடும்பங்களின் உறுப்பினர்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஆட்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கொழும்பில் மாத்திரம் 50ஆயிரம் பேர் போதைவஸ்து பாவனையாளர்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருளை பயன்படுத்துபவர்களில் பலர், தமது மகள்களையே பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குதல் உட்பட்ட பல குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.
இந்தநிலையில் போதைவஸ்து விநியோகங்களுக்கு பாதுகாப்படையினரின் உதவியும் கிடைப்பதை கவனிக்க வேண்டும் என்றும் ரதன தேரர் குறிப்பிட்டார்.
எனவே, இவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச சார்பில் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா; இலங்கையில் 122,000 பேர் ஹெரோயின் பாவனைக்கு ஆட்பட்டுள்ளனர்.
கேரளா கஞ்சாவுக்கு இரண்டு லட்சத்துக்கு 75ஆயிரம் பேர் அடிமையாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் ஐஸ் போதைப்பொருளுக்கு ஆட்பட்டுள்ளனர்” என்றார்..
அந்த வகையில் 445,000 பேர் இலங்கையில் போதைவஸ்து பாவனைக்கு ஆட்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.



