வெளித் தொடற்பற்று வாழ்ந்த, உலகின் கடைசி ‘குழி மனிதன்’ மரணம்: இவரின் பழங்குடி இனத்தில் இனி யாரும் இல்லை

🕔 August 30, 2022
குழி மனிதனின் முகம் தெரியும் ஒரே படம்

வெளி உலகத் தொடர்பில்லாத, பிரேசிலின் பழங்குடியொன்றைச் சேர்ந்த கடைசி நபர் மரணமடைந்தார். இந்தத் தகவலை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

கடந்த 26 ஆண்டுகளாகப் பெயர் தெரியாத அந்த மனிதர், பிறருடன் எந்தத் தொடர்புமின்றித் தனிமையில் வாழ்ந்து வந்தார். அவர் ‘குழி மனிதன்’ என்று அழைக்கப்பட்டார். காரணம் விலங்குகளைப் பிடிக்கவும் தான் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொள்ளவும் என ஆழமான குழிகளை அவர் தோண்டி வந்தார்.

அவரின் குடிசைக்கு வெளியில் ஒரு தொங்கும் கயிற்றுக் கட்டிலில் ஓகஸ்ட் 23ஆம் திகதி இவரின் சடலம் காணப்பட்டது. வன்முறைத் தாக்குதல் எதுவும் நடந்ததற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.

60 வயதான இவரின் மரணம் இயற்கையானது என்றே கருதப்படுகிறது.

பிரேசில் – பொலிவியா எல்லையில் உள்ள ரோண்டோனியா மாகாணத்தில் தனாரு  எனும் பழங்குடியினப் பகுதியில் வாழ்ந்து வந்த குழுவினரின் கடைசி மனிதர் இவராவார்.

அவரின் இனத்தவரில் பெரும்பாலோர் 1970-களில், தங்கள் நிலத்தை விரிவுபடுத்த விரும்பிய பண்ணையாளர்களால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

1995 ஆம் ஆண்டில், அவரின் பழங்குடியினத்தவர்களில் மீதமுள்ள ஆறு பேர், சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதனால் அவர் மட்டுமே எஞ்சியிருந்தார்.

பிரேசிலின் பூர்வ குடிகள் விவகார பணியகமான – ஃபுனாய் (Funai) 1996 இல் அவர் உயிர் பிழைத்திருப்பதை அறிந்து, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த, அப்பகுதியைக் கண்காணித்து வந்தது.

ஃபுனாயின் ஏஜென்டான – அல்டயர் ஜோஸ் அல்கேயர் என்பவர், தனது வழக்கமான ரோந்துப் பணியின் போது, குழி மனிதனின் குடிசைகளில் ஒன்றின் வெளியே ஒரு தொங்கு ஊஞ்சலில் மக்காவ் பறவையின் இறகுகளால் மூடப்பட்டிருந்த மனிதனின் சடலத்தைக் கண்டார்.

பூர்வ குடிகள் நிபுணரான மார்செலோ டோஸ் சான்டோஸ் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “தான் இறக்கப் போவதை அறிந்து, அவர் தன் மீது இறகுகளை வைத்து மூடிக்கொண்டதாக நான் நினைக்கிறேன். வன்முறைக்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை” என்று கூறினார்.

அவரின் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு 40 முதல் 50 நாட்களுக்கு முன்பு அந்த நபர் இறந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பிராந்தியத்தில் எந்தவித ஊடுருவலும் நடந்தமக்கான அறிகுறிகளும் இல்லை என்றும் அவரின் குடிசையிலும் எதுவும் சேதம் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு நோய் தாக்கியதா என்பதை அறியப் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

வெளியாட்களுடனான தொடர்பை அவர் தவிர்த்துள்ளதால், அந்த நபர் எந்த மொழியில் பேசினார், எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

2018 ஆம் ஆண்டில், ஃபுனாய் உறுப்பினர்கள் எதேச்சையாகக் காட்டில் இவரைச் சந்தித்த போது அவரை வெற்றிகரமாகப் படம்பிடித்தனர். அந்தக் காட்சிகளில், அவர் ஒரு மரத்தைக் கோடாரியைப் போன்ற ஒன்றைக் கொண்டு வெட்டுவதைக் காணலாம்.

மரம் வெட்டும் குழி மனிதன்

அன்றிலிருந்து அவரைக் காணவில்லை, ஆனால் ஃபுனாய் முகவர்கள் அவருடைய ஓலைக் குடிசைகளையும் அவர் தோண்டிய ஆழமான குழிகளையும் கண்டனர்.

சில குழிகளின் அடியில், கூர்முனைக் கம்பிகள் வைக்கப்பட்டிருந்ததால், அவை காட்டுப்பன்றி போன்ற விலங்குகளைப் பிடிக்கத் தோண்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அவரது உடலைக் கண்டுபிடித்த ஃபுனாய் ஏஜென்ட் அல்கேயர், அந்த மனிதர் பல ஆண்டுகளாக கட்டிய 50 க்கும் மேற்பட்ட குடிசைகள் அனைத்திலும் 10 அடி ஆழமான குழியும் இருந்தது என்று கூறுகிறார்.

அந்தக் குழிகள் அவருக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்திருக்கலாம் என்று அல்கேயர் கருதுகிறார். மற்றவர்கள் அவற்றை அவர் மறைவிடமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கணிக்கின்றனர்.

இப்பகுதியில் பல ஆண்டுகளாக கிடைத்த சான்றுகளின்படி – அவர் சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டதுடன் தேன், பப்பாளி மற்றும் வாழை போன்றவற்றையும் சேகரித்தார் என தெரியவருகிறது.

குழி மனிதனின் குடிசை

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்