தலைப்புச் செய்திகள்

மாளிகைக்காட்டில் பாலியல் துஷ்பிரயோகம்: பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு

– பாறுக் ஷிஹான் –

பெண்ணொருவர் அவரின் 03 வயது குழந்தைக்கு முன்னால் வைத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காக, காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

25 வயதுடைய தாயொருவர் மாளிகைக்காடு பகுதியில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானதாக, காரைதீவு பொலிஸ் நிலையத்தில் அண்மையில் முறையிடப்பட்டது.

கடந்த ஜுலை மாதம் 03ஆம் திகதி குறித்த பெண்ணை, அவரின் கணவர் வீட்டில் இல்லாத வேளையில், அவரின் 03 வயது பிள்ளை பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அயலவர் ஒருவர் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் 01 வயது மற்றும் 03 வயது பெண் குழந்தைகளின் தாயாராவார். இவர் மாளிகைக்காடு கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் வீட்டில் கணவர் இல்லாத போது, குறித்த தினம் இரவு 07 மணியளவில் வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்த நபர் ஒருவர், அந்தப் பெண்ணின் 03 வயதான மகள் பார்த்து கொண்டிருக்கத் தக்கதாக, கத்தியைக் காட்டி அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக முறையிடப்படடுள்ளது.

அந்த நேரத்தில் மேற்படி பெண் அபயக்குரல் எழுப்பியும் எவரும் அவரைக் காப்பாற்றவில்லை எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னை துஸ்பிரயோகப்படுத்திய நபர் 20 ஆயிரம் ரூபா பணம்  மற்றும் சில பொருட்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் – முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு செய்த போதும், தனக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகைளை பொலிஸார் மேற்கொள்ளத் தவறியதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலத்தில் அந்தப் பெண் முறையிட்டுள்ளார்.

இதேவேளை தனக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறும் அவர் அந்த முறைப்பாட்டில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த  முறைப்பாட்டுக்கு அமைய, காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகம் விசாரணைக்கான அழைப்பாணையொன்றை அனுப்பி வைத்துள்ளது.