06 அமைப்புகள் மீதான தடை நீக்கம்: 316 நபர்கள், 15 அமைப்புகளுக்கான தடை தொடர்கிறது

🕔 August 14, 2022

லங்கைக்குள் தடை செய்யப்பட்ட 06 தமிழ் அமைப்புக்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு, திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு, கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய 06 அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், இலங்கைக்குள் 577 நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 18 அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், 316 பேருக்கான தடை நீக்கப்பட்டுள்ளதுடன், 06 அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

316 பேரில் ஒரே பெயரை கொண்ட 07 பேரின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், புதிதாக 55 பேரையும் 03 அமைப்புக்களையும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இலங்கைக்குள் 316 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 அமைப்புக்களுக்கு நாட்டிற்குள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடை செய்யப்பட்ட அமைப்புகளுள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அடங்குகின்றது.

அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலப் பகுதியில் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் மீதான தடையும் அமுலில் உள்ளது.

இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச ரீதியாக தமிழர்களின் பங்களிப்பு அவசியம் என கடந்த காலங்களில் தமிழர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

Comments